×

ஆளுங்கட்சியினர் கமிஷன் கேட்டு மிரட்டல் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தடுப்பதாக புகார் : கான்ட்ராக்டர்கள் பகீர் குற்றச்சாட்டு

சென்னை: கமிஷன் கொடுத்தால் மட்டுமே பணிகளை செய்ய அனுமதிப்போம் என்று ஆளும்கட்சியினர் கமிஷன் கேட்டு கான்ட்ராக்டர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மண்டலத்தில் கீழ்பாலாறு கோட்டத்தில் 9 பணிக்கு 1.85 கோடி, கொசஸ்தலையாறு கோட்டத்தில் 10 பணிக்கு 1.78 கோடி, ஆரணியாறு கோட்ட வடிநிலத்தில் 10 பணிக்கு 1.76 கோடி, கிருஷ்ணா நீர்விநியோக திட்டகோட்டத்தில் 6 பணிக்கு 24 லட்சம், வெள்ளாறு கோட்டத்தில் 6 பணிக்கு 47 லட்சம், சிதம்பரம் கொள்ளிடம் கோட்டத்தில் 10 பணிக்கு 1.55 கோடி என மொத்தம் 51 பணிக்கு 7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் பருவமழை தூர்வாரும் பணிக்கு குறுகிய கால டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து கடந்த 25ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு, 6 ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்கு 45 சதவீதம் கமிஷன் கொடுத்தால் மட்டுமே பணிகளை தொடங்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கான்ட்ராக்டர்களிடம் நிபந்தனை விதித்தனர். இதை தொடர்ந்து கான்ட்ராக்டர்கள் 45 சதவீதம் கமிஷனை உயர் அதிகாரிகளிடம் அளித்தனர். அதன்பிறகு கான்ட்ராக்டர்கள் வடகிழக்கு முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்கினார்கள். கால்வாய்களில் ஆகாயத்தாமரை, குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை அக்டோபர் 2 வாரத்துக்குள் முடிக்க பொதுப்பணித்துறை கான்ட்ராக்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது, அந்தெந்த பகுதிகளை சேர்ந்த ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் தங்களுக்கு கமிஷன் தந்தால் தான் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை செய்ய விடுவோம் என்று மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. இதனால், கான்ட்ராக்டர்களும் பணிகளை செய்யாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில் கான்ட்ராக்டர்கள் பணிகளை நிறுத்தி வைத்தால் பல்வேறு பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Governors , Governors complain, Commission of Intimidation
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...