×

ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்கிறது : விலை அதிகம் என்பதால் மாற்றுவழியை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்

நாகர்கோவில்: மாற்றுவழிகளை நடைமுறைப்படுத்துவதில் விலை உயர்வு உள்ளிட்ட சிக்கல் தொடருவதால் ரயில் நிலையங்களில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்கிறது. தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகாரிகள் சோதனை நடத்தி அபராதம் விதிக்கப்படுவதுடன் பொருட்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில் நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். மேலும் கடந்த செப்டம்பர் 16ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதியையொட்டி நடத்தப்பட்ட மகாத்மா காந்தி 150ம் ஆண்டு பிறந்தநாள் விழாக்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பல பகுதிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு இப்போதும் தொடர்கிறது. ஆனால் ஒருமுறை மட்டும் பயன்படுத்துகின்ற பிளாஸ்டிக் ரயில்நிலையங்களில் உள்ள கடைகளிலும், உணவு விடுதிகளிலும் தொடர்ந்து சர்வசாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாகர்கோவில், கன்னியாகுமரி உட்பட திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள ரயில்நிலையங்களில் கடந்த அக்டோபர் 2ம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் ரயில்நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரும் தேதி முடிவு செய்யப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்படுகின்ற பிளாஸ்டிக் கலந்த கப், பிளேட் போன்றவற்றுக்கு பதிலாக கரும்பு சக்கையில் இருந்து தயாரிக்கப்பட்ட கப், பிளேட் போன்றவற்றை பயன்படுத்த ரயில்வே ஆலோசித்தது. வட இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் இதனை தயாரித்து வழங்குகிறது. ரயில் நிலையங்களில் உணவு பொருள் விற்பனை நிலையங்கள், கடைகள் நடத்துகின்றவர்களிடம் புதிய பொருட்களை கொண்டு இது தொடர்பான செயல்விளக்க நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. ரயில்வே சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் ரயில்நிலையங்களில் கடைகள் நடத்துகின்றவர்களை அழைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

ஆனால் கரும்பு சக்கையில் இருந்து தயாரிக்கப்படுகின்ற கப், பிளேட் போன்றவற்றுக்கு விலை அதிகம் என்பதால் பயணிகளிடம் இருந்து உணவு பொருட்களுக்கான விலையில் அதிகம் வசூலிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உணவு பொருட்களின் விலையை உயர்த்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று லைசென்சு பெற்றுள்ள உணவு பொருள் கடைக்காரர்கள் ரயில்வேக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கரும்பு சக்கையில் இருந்து தயாரிக்கப்படுகின்ற கப்புக்கு ரூ.3ம், பிளேட்டுக்கு ரூ.6ம் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று இதனை தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது தற்போது பயன்பாட்டில் உள்ள கப், பிளேட் போன்ற பொருட்களின் விலையை விட அதிகம் ஆகும். அதே வேளையில் பயணிகளிடம் இருந்து கூடுதல் தொகை வசூலிக்க கூடாது என்று ரயில்வே தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இதனை தொடர்ந்து ரயில்நிலைய விற்பனை நிலையங்களில் லைசென்சு தொகையில் சலுகை அளித்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்த ஏற்படுகின்ற கூடுதல் செலவை ஈடு செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக திருவனந்தபுரம் கோட்டம் சார்பில் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு வணிக பிரிவு தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதில் கிடைக்கின்ற தீர்வு அடிப்படையில்தான் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ரயில்நிலையங்களில் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : railway stations , Plastic use continues , railway stations, Problems ,implementing alternatives
× RELATED வேலூர், விழுப்புரம் என 161 ரயில்...