×

கோவளம் கடற்கரையில் அதிகாலையில் வாக்கிங் குப்பைகளை அகற்றினார் மோடி

சென்னை: கோவளம் கடற்கரையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த மோடி, அதிகாலையில் கடற்கரையில் வாக்கிங் மற்றும் ஜாக்கிங் சென்றார். அப்போது கடலில் அடித்து வரப்பட்ட குப்பைகளையும் அவர் அகற்றினார். சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, நேற்று முன்தினம் காலை சென்னை வந்த பிரதமர் மோடி, கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோ ஓட்டலில் தங்கினார். நேற்று முன்தினம் இரவும் அங்கு தங்கினார். அதிகாலையில் எழுந்த மோடி, கடற்கரையில் வாக்கிங் மற்றும் ஜாக்கிங் சென்றார். அப்போது கையில் மசாஜ் செய்வதற்கான தடியை வைத்திருந்தார். கடலில் முழங்கால் அளவுக்கு தண்ணீரிலும் இறங்கி உற்சாகமாக நடந்து சென்றார். கடற்கரையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த கருங்கல்லில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

பின்னர் பிரதமர் மோடி நேற்று காலை கோவளம் கடற்கரையில் தூய்மை பணி மேற்கொண்டார். கடல் அலையில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்களை அள்ளி ஒரு பையில் சேகரித்தார். அது தொடர்பான வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பிளாக்கிங்’ முறையில் 30 நிமிடங்கள் கடற்கரையில் உள்ள குப்பையை சேகரித்து, அதை நட்சத்திர விடுதி ஊழியர் ஜெயராஜிடம் அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள உறுதியேற்போம். பொது இடங்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘பிளாக்கிங்’ என்றால் ஆங்கிலத்தில் ‘pick up and jogging’  என்றழைக்கப்படுகிறது. நடைப்பயிற்சி மற்றும் சீரான ஓடுபயிற்சி  மேற்கொள்ளும்போதே இடையிடையே நின்று, குனிந்து, உட்கார்ந்து கோணிப்பையில்  குப்பையை சேகரிக்கும் ஒரு வகையிலான உடற்பயிற்சி தொகுப்பு முறையே  ‘பிளாக்கிங்’ என்றும் ‘பிளாக்கிங் சவால்’ என்றும் கூறப்படுகிறது.பிரதமர் மோடி, அதிகாலையில் வாக்கிங் சென்ற இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


Tags : Modi ,beach ,Kovalam , Modi,morning garbage, Kovalam beach
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...