×

கால்நடை மருத்துவர் 818 பேர் பணி நீக்கம்: அரசு திடீர் நடவடிக்கையால் அதிர்ச்சி: தொடர் போராட்டங்களை நடத்த முடிவு

மதுரை: கால்நடை உதவி மருத்துவர்கள் 818 பேர் திடீர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி பணி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் மாதம் 40 ஆயிரம் தொகுப்பூதியத்தில் கடந்த ஆண்டு தற்காலிகமாக கால்நடை உதவி மருத்துவர்கள் 818 பேர் பணியமர்த்தப்பட்டனர். இவர்களைக் கொண்டே தமிழகம் முழுவதும் நாளை திங்கட்கிழமை துவங்கி, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த 818 பேரையும்  பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கால்நடை உதவி மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதால் எவ்வாறு தடுப்பூசி பணிகள் நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், தொகுப்பூதிய அடிப்படையிலான இப்பணிக்கு பல லட்சம் பணம் கொடுத்தே சேர்ந்திருக்கிறோம். எப்படியாவது பணி நிரந்தரம் செய்து விடுவார்கள் அல்லது இந்த தொகுப்பூதிய பணி தொடரும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். தற்போது திடீரென்று நீக்கப்பட்டிருப்பது எங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. வேறு ஆட்களை கூடுதல் தொகை பெற்றுக்கொண்டு நியமிப்பதற்காகவே  நீக்கப்பட்டுள்ளதாக கால்நடை உதவி மருத்துவர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
 பணி நீக்கப்பட்ட டாக்டர்கள் கூறும்போது, ‘‘கால்நடைத்துறையில் ஏற்கனவே கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்ள் பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருக்கின்றன. தற்போது தொகுப்பூதியம் பெற்று வந்த கால்நடை உதவி மருத்துவர்களான எங்களையும் பணி நீக்கம் செய்வதால், கால்நடைத்துறையில் மருத்துவப் பணிகள் முழுமையாக முடங்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே செப்டம்பர் முதல் தேதியில் இருந்தே கோமாரி தடுப்பூசி பணி நடத்த இருந்தது.

ஆனால், தற்போது தாமதமாக அக்.14ல்தான் துவங்கும் என்று அறிவித்தனர். இந்நிலையில், இந்த முகாமை எப்படி நடத்த முடியும்? விவசாயிகள் இதனால் பெரும் பாதிப்பிற்கு ஆளாவர். எனவே அரசு மறுபரிசீலனை செய்து, எங்கள் பணி நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் தீவிர தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்’’ என்றனர்.



Tags : veterinarians ,government ,protests , Veterinarian, dismissal
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...