×

திருச்சி பிரபல நகைக்கடையில் 13 கோடி கொள்ளை சம்பவம் கொள்ளிட கரையில் புதைத்து வைத்த 11.50 கிலோ தங்கம் தோண்டி எடுப்பு

* முருகனுடன் வந்த பெங்களூரு போலீசாரை மடக்கி பிடித்து விசாரணை

திருச்சி: திருச்சி பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட நகைகளில் 11.50 கிலோ, கல்லணை அருகே கொள்ளிட கரையில் புதைக்கப்பட்டு இருந்தது. கர்நாடக போலீசார் முருகனை அழைத்து வந்து அந்த நகைகளை தோண்டி எடுத்தனர். பின்னர் அவர்கள் பெங்களூரு சென்ற போது வழியில் பெரம்பலூர் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் கடந்த 2ம் தேதி சுவரை துளையிட்டு ₹13 கோடி மதிப்பிலான 28 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை தொடர்பாக தனிப்படையினர் நடத்திய விசாரணையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் தலைமையில் 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன், முருகனின் சகோதரி கனகவல்லி, அவரது மகன் சுரேஷ் ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைமறைவான முருகன் நேற்று முன்தினம் பெங்களூரு 11வது குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி நாகம்மா முன்னிலையில் சரணடைந்தான். அவனை 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டான். முருகனை காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூரு போலீசார் அன்றைய தினமே நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 5 நாட்கள் அனுமதி கிடைத்ததால் இரவு சிறைச்சாலையில் இருந்து அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கொள்ளையடித்த நகைகளை திருச்சி அருகே கொள்ளிடம் கரையில் புதைத்து வைத்திருப்பதாக முருகன் ஒப்புக்கொண்டுள்ளான். இதன்பின், பெங்களூரு போலீசார் முருகனை நேற்று முன்தினம் இரவோடு இரவாக திருச்சி அழைத்து வந்தனர். வழியில்  கல்லணை அருகே கொள்ளிடம் கரையோரம் நகைகளை புதைத்து வைத்திருப்பதாக தகவல் தெரிவித்தான்.

அதன்படி, கொள்ளிடக்கரையில் முருகன் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டினர். தோண்ட, தோண்ட தங்க நகைகள் வருவதை பார்த்து போலீசார் அதிர்ந்து போனார்கள். இந்த நகைகள், திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மொத்தம் 11.50 கிலோ நகைகளை கைப்பற்றிய கர்நாடக போலீசார், முருகனுடன் மீண்டும் பெங்களூருவுக்கு புறப்பட்டனர்.  இதனிடையே, திருச்சி தனிப்படை போலீசார், முருகனை காவலில்  எடுப்பதற்காகவும் சிறை கைதியை பி.டி.வாரன்ட் (பிரிசனர் டிரான்ஸ்பர்  வாரன்ட்) திருச்சி சிறைக்கு மாற்றும் மனுவுடனும் பரப்பன அக்ரஹார சிறைக்கு  சென்ற தனிப்படை போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முருகனை இரவோடு  இரவாக திருச்சி அழைத்து சென்றதாக கூறியதை அடுத்து இதுகுறித்து தகவல்  உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

 உடனே திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், பெரம்பலூர் எஸ்.பி. நிஷா பார்த்திபனை தொடர்பு கொண்டு கொள்ளை பற்றி முருகனிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதைதொடர்ந்து எஸ்.பி. நிஷா, ஹைவே பேட்ரோலுக்கு தகவல் அளித்தார். அதன்படி பெரம்பலூர் ஆத்தூர் சாலை கிருஷ்ணாபுரம் அருகே 2 கார்களில் சென்ற பெங்களூரு போலீசாரை, ஹைவே பேட்ரோல் போலீசார் மடக்கி பிடித்தனர். முதலில் வாக்குவாதம் செய்த கர்நாடக போலீசார் அதன்பின் அவர்களுடன் பெரம்பலூரில் உள்ள ஆயுதப்படை மைதானத்துக்கு வந்தனர். தொடர்ந்து திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக், மாநகர துணை கமிஷனர் மயில்வாகனன் மற்றும் போலீசார் பெரம்பலூர் சென்று மீட்கப்பட்ட நகைகள் எங்கு கொள்ளையடிக்கப்பட்டது என்பது பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும்  லலிதா ஜுவல்லரி  ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்ததில் 11.50 கிலோ தங்கம், அரைகிலோ வைரம் தங்கள் கடைக்கு சொந்தமானவை தான் என தெரிவித்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வந்ததால் இருமாநில போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். அவற்றை நீதிமன்றத்தில் மனு செய்து பெற்று கொள்ளலாம் என எழுத்து பூர்வமாக எழுதி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடக போலீசார் முருகனை அழைத்து கொண்டு பெங்களூரு சென்றனர்.

17 கிலோ நகைகள் பறிமுதல்
புதைத்து வைத்து எடுக்கப்பட்ட 11.50 கிலோ நகை, திருவாரூரில் 4.80 கிலோ நகை, மதுரையில் மளிகைக்கடை வியாபாரியிடம் 1 கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 கிலோ நகை எங்கே என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளிடக்கரையில் பங்கு போட்ட கும்பல்
திருவெறும்பூர் அருகே வீடு எடுத்து தங்கிய முருகன், 2ம் தேதி கொள்ளையை அரங்கேற்றிய பின் கல்லணை அருகே காவிரி கரையில் கூட்டாளிகளுடன் அமர்ந்து நகையை பங்கு போட்டுக்கொண்டனர். சுரேஷ்க்கு 5 கிலோ, மதுரை கூட்டாளிக்கு 5 கிலோ என பிரித்து கொடுத்து விட்டு, புதுச்சேரி சென்று அங்கிருந்து பெங்களூருக்கு முருகன் சென்றுவிட்டார்.

முந்திக்கொண்ட பெங்களூரு போலீஸ்
கொள்ளையன் முருகன் மீது கர்நாடகாவில் மட்டும் 165 கொள்ளை வழக்குகள் உள்ளது. இதில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த கொள்ளை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் முருகன் சரணடைந்தார். திருச்சி போலீசார் கஸ்டடி கேட்டு மனுத்தாக்கல் செய்வதற்குள் முந்தி கொண்டு கஸ்டடி எடுத்தனர். விசாரணையில் நகைகளை திருச்சியில் பதுக்கி வைத்திருப்பதாக கூறியதை அடுத்து முருகனை அழைத்து கொண்டு கல்லணை கொள்ளிடக்கரை வந்து நகைகளை பறிமுதல் செய்து சென்றனர். தற்போது திருச்சி தனிப்படை போலீசார் காவல் கேட்டு மனுத்தாக்கல் செய்ய நேற்று பெங்களூரு சென்றுள்ளனர்.

மதுரை கூட்டாளியிடம் ரகசிய விசாரணை
கொள்ளை வழக்கில் மணிகண்டன், முருகன் அக்கா கனகவல்லி, சுரேஷ்  ஆகியோர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். நகையை உருக்கி விற்ற பொற்கொல்லர் நாகை காளிதாஸ், மதுரை சமயநல்லூர் மளிகை வியாபாரி மகேந்திரன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், முருகனுடன் நகை கடைக்குள் புகுந்த மதுரையை சேர்ந்த கூட்டாளியை மடக்கி பிடித்து ரகசிய
இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Trichy Trichy , Trichy, jewelery, booty, gold
× RELATED கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட...