×

மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 8,026 பேரில் 6,897 பேரின் டெபாசிட் காலி: தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 8,026 வேட்பாளர்களில் 6,897 பேர் டெபாசிட் தொகையை இழந்ததாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் வேலூரை தவிர்த்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. நாடு முழுவதும் 8,026 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தபால் வாக்குகள் உட்பட 67.4 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்த வேட்பாளர்களில் வெற்றி பெற்றவர்கள் தவிர்த்து, தோல்வியடைந்த 7,484 வேட்பாளர்களில் வெறும் 587 வேட்பாளர்களே டெபாசிட் பெற்றுள்ளனர்.

மீதமுள்ள 6,897 வேட்பாளர்கள் ெடபாசிட் தொகையை இழந்தனர். அவர்களில் கட்சிகள் வாரியாக பார்த்தால், பகுஜன் சமாஜ்வாதி கட்சி 383 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், 345 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. காங்கிரஸ் 421 தொகுதிகளில் 148 இடங்களிலும், மா.கம்யூ கட்சி 69 இடங்களில் 51 இடங்களிலும் டெபாசிட்டை இழந்தது. இ.கம்யூ கட்சி 49ல் 41 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 34ல் 14 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 62ல் 20 இடங்களிலும் டெபாசிட் தொகையை இழந்தது. மேலும், 303 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த பாஜ கட்சி 51 இடங்களில் மட்டுமே டெபாசிட்டை பறிகொடுத்தது.

அதேநேரத்தில், தேசிய கட்சிகள் என்ற அடிப்படையில் பெற்ற வாக்குகளை பார்த்தால், பாஜ 37.78 சதவீதம், காங்கிரஸ் 19.7 சதவீதம், திரிணாமுல் காங்கிரஸ் 4.11 சதவீதம், பகுஜன் சமாஜ்வாதி கட்சி 3.67 சதவீதம், சிபிஎம் 1.77 சதவீதம், தேசியவாத காங்கிரஸ் கட்சி 1.4 சதவீதம், சிபிஐ 0.59 சதவீத வாக்குகள் பெற்றுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக பதிவான வாக்குகளில் லட்சத்தீவில் அதிகபட்சமாக 85.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த பட்சமாக ஜம்மு-காஷ்மீரில் 44.97 சதவீத வாக்குகள் பதிவாகின.

தொகுதிகள் அடிப்படையில் இந்தியாவிலேயே அசாம் மாநிலத்தின் துப்ரி தொகுதியில் அதிகபட்சமாக 90.66 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக ஜம்மு-காஷ்மீரின் அனந்நாக் தொகுதியில் 8.98 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 28 லட்சம் தபால் வாக்குகளில் 22.8 லட்சம் வாக்குகள் தகுதி பெற்றன. 5 லட்சத்திற்கு மேலான தபால் வாக்குகள் செல்லாத ஓட்டுகளாக நிராகரிக்கப்பட்டுள்ளன.  மேற்கண்ட தகவலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

Tags : elections ,Lok Sabha ,Chief Election Commission , Lok Sabha Election, Deposit Vacancy, Election Commission
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...