×

நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதை திரைப்படங்களின் வருமானமே உறுதிப்படுத்தியிருக்கிறது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேட்டி

மும்பை:  கடந்த சில மாதங்களாக பொருளாதார வளர்ச்சி 7 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலையை அடைந்து 5 சதவிகிதமாக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக இருந்தது. இதற்கு முன்னர் 2012 மற்றும் 2013ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.9 சதவிகிதமாக இருந்ததே மிகவும் குறைவான பொருளாதார வளர்ச்சியாகும். உற்பத்தி துறையிலும், வேளாண் துறையிலும் ஏற்பட்ட சரிவே, சமீபத்திய மந்த நிலைக்கு காரணம் என மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத்துறை கூறியிருந்தது. ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் உற்பத்தியும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள் உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளன.

இதனைத்தொடர்ந்து அந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்து வருகின்றன. நாட்டின் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதனிடையே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜூன் மாத காலாண்டில் 5 சதவீதமாக குறைந்தது. பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய அரசாங்கம் பல்வேறு துறை சார்ந்த தீர்வுகளை வழங்கி வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாட்டில் பொருளாதார மந்தநிலை என்பது இல்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார்.

அப்போது அவரிடம் பொருளாதார மந்தநிலை தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். அக்டோபர் 2-ம் தேதி வெளியான 3 திரைப்படங்களும் முதல் நாளில் மொத்தம் ரூ.120 கோடி வசூலித்துள்ளது. 3 திரைப்படங்களுக்கு ரூ.120 கோடி ஒரே நாளில் வசூலாகும் அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாகவும், மந்தநிலை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Tags : Ravi Shankar Prasad ,country , The country's economy, Ravi Shankar Prasad
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!