×

பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் முருகனிடம் விசாரணை: பறிமுதல் செய்யப்பட்ட 7 கிலோ நகைகள் திருச்சி லலிதா ஜுவல்லரி நகைகள் தான் என கண்டுபிடிப்பு

பெரம்பலூர்: திருச்சி நகை கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனை கர்நாடகா போலீசார் திருச்சி அழைத்து வந்த போது தமிழக போலீஸ் அவனை மடக்கி பிடித்து, பெரம்பலூரில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 கிலோ நகைகள் திருச்சி லலிதா ஜுவல்லரி நகைகள் தான் என்பது தெரியவந்துள்ளது. தமிழகம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே  உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையின் மேற்குபுறம் உள்ள சுவரை துளையிட்ட மர்ம  நபர்கள் ரூ.13 கோடி மதிப்பிலான 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைரம்,  பிளாட்டினம் உள்ளிட்ட நகைகளை  கொள்ளையடித்து சென்றனர். கடந்த 2ம் தேதி  நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டு பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பெங்களூர் போலீசார் விசாரணைக்காக அழைத்து வரும் நிலையில் திருச்சியில் நகை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டதன் பேரில் இங்கு அழைத்து வந்துள்ளனர். திருச்சியில் பதுக்கி வைக்கப்பட்ட நகைகளை முருகன் எடுத்து தந்தவுடன் அதை எடுத்துக்கொண்டு, வர 8 பேர் கொண்ட கர்நாடகா போலீஸ் குழு திருச்சி வந்திருந்தது. இவர்கள் 2 கார்களில் போலீசார் சென்றுள்ளார். அப்போது பெரம்பூரில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் சேலம் நோக்கி செல்லும் போது பெரம்பலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவர்களை பிடித்தனர்.

அவர்களை பிடித்து விசாரணை செய்யும் போது முக்கிய குற்றவாளி முருகன் அந்த வாகனத்தில் இருப்பது தெரிய வந்தது, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து திருச்சி குற்றப்பிரிவு போலீசார், திருச்சி எஸ்.பி. ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் லலிதா ஜுவல்லரி கடையின் நகை மதிப்பீட்டாளர் குழுவுடன் நேரடியாக இங்கு வந்தனர். இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் உயர் அதிகாரிகள் முருகனிடம் விசாரணை மேற்கொண்டனர். முருகன் எடுத்து வந்த நகையில் லலிதா ஜுவல்லரிக்கு சொந்தமான நகை உள்ளதா?, என நகை மதிப்பீட்டாளர் மூலம் சோதனை படுத்தப்பட்டது.

இந்த விசாரணையில் முருகனிடம் பறிமுதல் செய்யப்பட்ட 7 கிலோ தங்க நகைகள் திருச்சி லலிதா ஜுவல்லரி நகை தான் என உறுதி செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து முருகனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முருகனிடம் பறிமுதல் செய்த நகைகளை பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைக்க கர்நாடகா போலீஸ் முடிவு செய்துள்ளது. பெங்களூரு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தமிழக போலீஸ் நகைகளை திரும்ப பெரும் எனவும் கூறப்படுகிறது.



Tags : Murugan ,Perambalur Armed Forces Murugan ,Perambalur Army Stadium , Perambalur, Murugan, Inquiry, Trichy Lalitha Jewelery
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...