×

பிரதமர் மோடி - சீன அதிபர் இடையிலான கலந்துரையாடல் நிறைவு; அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடக்கம்

சென்னை: கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின் பிங் இடையிலான கலந்துரையாடல் 55 நிமிடத்திற்கு பின் நிறைவு பெற்றுள்ளது. வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த ஆலோசனையின் போது மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமே உடனிருந்தனர். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார். முன்னதாக நேற்று காலை 11.05 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தார். அவரை தொடர்ந்து சீன அதிபர் ஜின் பிங் தனி விமானம் மூலம் சரியாக நேற்று மதியம் 2 மணிக்கு சென்னை வந்தார்.

அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலை 4.05 மணிக்கு கிண்டி ஓட்டலில் இருந்து காரில் சாலைமார்க்கமாக மாமல்லபுரம் புறப்பட்டு சென்றார். மாலை 5.03 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசு சிற்பம் அருகே காரில் வந்து இறங்கினார். காரில் வந்து இறங்கிய சீன அதிபரை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் நடந்து சென்றபடி அர்ஜுனன் தபசு சிற்பத்தை பார்த்து ரசித்தனர். அங்குள்ள சிற்பங்களின் வரலாற்றை பிரதமர் மோடியே சீன அதிபருக்கு விளக்கினார். சீன அதிபரும் அங்குள்ள கலை சிற்பங்களை ரசித்து பார்த்தார்.

கலைநிகழ்ச்சிகள் முடிந்ததும் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இதில் தமிழர்கள் விரும்பி சாப்பிடும் தோசை, இட்லி, வடை உள்ளிட்ட உணவு வகைகளே பரிமாறப்பட்டது. இதை சீன அதிபர் விரும்பி சாப்பிட்டார். விருந்து முடிந்ததும், நேற்று இரவு9.00 மணிக்கு மேல்  சீன அதிபர் மாமல்லபுரத்தில் இருந்து காரில் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வந்து இரவு தங்கினார்.

இதனையடுத்து இன்று காலை மோடி தங்கியிருந்த தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்கு கார் மூலம் சீன அதிபர் சென்றார்.  அ்ங்கு சென்ற ஜி ஜின் பிங்கை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் ஓட்டலில் கண்ணாடி அறையில் தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமே உடனிருந்தனர். சுமார் 55 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு முடிவடைந்தவுடன் கடற்கரையை ரசித்தனர். இதே போல் இருநாட்டு அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இதில் 8 அதிகாரிகள் வீதம் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


Tags : Modi ,talks ,Chinese ,negotiations ,Summit ,Mamallapuram ,Xi Jinping ,President , Mamallapuram, Prime Minister Modi, Chinese President, Xi Jinping, Informal Summit, Trade, Security
× RELATED மோடியின் சீன உத்தரவாதம் லடாக் மக்களுக்கு துரோகம்: கார்கே சாடல்