×

திருச்சி எம்ஆர்பாளையம் காப்பகத்தில் 4 யானைகள் குதூகலம்

*நடை பயிற்சி, ஷவர் குளியலில் அசத்தல்

மண்ணச்சநல்லூர் : திருச்சி சிறுகனூர் எம்ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் காப்பகத்திற்கு வந்த 4 யானைகள் குதூகலத்துடன் உள்ளது. தினமும் நடைபயிற்சியுடன், ஷவரில் ஆனந்த குளியல் போட்டு வருகிறது.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் சந்தியா (44), ஜெயந்தி(21), இந்து (35) ஆகிய 3 யானைகள் கோயில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த யானைகளை பராமரித்து வந்த பாகன் இறந்துவிட்டார். யானைகளை பராமரிக்க உரிய பாகன்கள் இல்லாததால் யானைகள் நலிவடைந்தன. உடலில் காயங்களும் ஏற்பட்டது.

இதனால் அந்த 3 யானைகளும் கோயில் நிர்வாகம் சார்பாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள டிரீ பவுண்டேஷன் என்று விலங்குகள் நல பாதுகாப்பு தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு 13 ஏக்கர் பரப்பளவில் இயற்கையான பசுமையான சூழலில் யானைகள் கடந்த 3 ஆண்டுகளாக பராமரித்து வந்தனர். அங்கு யானைகள் சங்கிலியால் கட்டிப்போடாமல் சுதந்திரமாக வளர்க்கப்பட்டது. அதற்கு தேவையான உணவுகள், மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டது. ஷவர்கள் பாத்கள் அமைக்கப்பட்டு குளிப்பாட்டப்பட்டது. இதனால் அங்கு யானைகன் சுதந்திரமாக வசித்து வந்தன.


alignment=



இந்நிலையில் காஞ்சிபுரம் கோயில் யானைகள் தனியார் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு அங்கு பராமரிக்கப்பட்டதற்கு சென்னையை சேர்ந்த வனவிலங்குகள் ஆர்வலர் முரளிகிருஷ்ணன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். யானைகளை அரசு மீட்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனியார் தொண்டு நிறுவனத்தில் வளர்க்கப்பட்ட 3 யானைகளையும் திருச்சி சிறுகனூர் எம்ஆர் பாளையத்தில் உள்ள யானகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லும்படி உத்தரவிட்டனர்.

அதன்படி, கடந்த மாதம் 27ம் தேதி 3 யானைகளும் வனத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டன. அதற்கு முன்பாக ஏற்கனவே மதுரையில் இருந்து மலாய்ச்சி என்ற யானையும் எம்ஆர்பாளையத்திற்கு கொண்டுவரப்பட்டு இருந்தது. அந்த 4 யானைகளும் தற்போது அனைத்துவிதமான வசதிகளுடனும் மகிழ்ச்சியாக உள்ளன. இது குறித்து திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் திருநாவுக்கரசு நேற்று நிருபர்களிடம் தெரிவித்ததாவது: மதுரை மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 யானைகளும் தற்போது சகஜமாக பழகி வருகின்றன. யானைகளுக்கு தினமும் பசுந்தீவனம், நாணல் காய்கறிகள் பழங்கள் சமைத்த அரிசி உணவுகள் சுமார் 260 கிலோ வரை வழங்கப்பட்டு வருகிறது.

சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வனத்துறை அலுவர்கள் 24 மணி நேரமும் யானைகளை கண்காணித்து வருகின்றனர். யானை சந்தியாவின் உடலில் நீண்டகாலமாக இருந்த காயம் ஆறி வருகிறது. தற்போது யானைகள் மகிழ்ச்சியாக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : kanchipuram ,Trichy MRPlayam Archive In trichy Elephants Champ 4 Elephants , trichy ,Elephants Champ,kanchipuram ,Elephants
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...