×

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு சென்னையில் மண்டலம் வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமனம்: ஆணையர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிகாலம் இதுவரை 6 முறை  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதன்தொடர்ச்சியாக முதல்கட்டமாக மாநில தேர்தல் அலுவலர்கள்,  மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம்  வெளியிட்டடது.இதன்படி உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம், அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குதல், மூன்று  ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.

இந்நிலையில் மாநில ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.  பொதுமக்கள் தங்களது பெயர் எந்த வாக்குச்சாவடியில் என்ற தகவலை www.tnsec.tn.nic.in  இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கிடையில் சென்னை மாநகராட்சி வார்டு வாரியாக வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆண் வாக்காளர்களுக்கு 78  வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு 78 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்கு 5,558 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5,714 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட  வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்களின்  எண்ணிக்கை 57 லட்சத்து 97 ஆயிரத்து 652 பேராக உள்ளது.

இந்நிலையில் வார்டு வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். 15 மண்டலங்களுக்கான உதவி  தேர்தல் நடத்தும் அலுவலர்களாக 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் உதவி வருவாய் அலுவலர் மற்றும் உதவி பொறியாளர் நிலையில் பணியாற்றிவரும் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக  நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : election officers ,Zonal ,Commissioners ,Chennai , Local Elections, Chennai, Zonal wise Election Officers Appointment
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...