×

நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மூடிய மருத்துவமனை மீண்டும் செயல்பட வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

திருப்போரூர்: நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மூடப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சியில் நெல்லிக்குப்பம், அகரம், அம்மாப்பேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் சுமார் 2500 வாக்காளர்களும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களும் வசிக்கின்றனர். மேலும் நெல்லிக்குப்பத்தைச் சுற்றி கீழூர், தர்மாபுரி, கொட்டமேடு, கொண்டங்கி, மேலையூர், நந்தம்பாக்கம் ஆகிய கிராமங்களும் உள்ளன. கடந்த 1965ம் ஆண்டு ஓ.வி.அளகேசன், மத்திய அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தபோது நெல்லிக்குப்பம் ஊராட்சியில் ஒன்றிய மருத்துவமனையை தொடங்கினார். போதிய போக்குவரத்து வசதியும் மருத்துவ வசதியும் இல்லாத காலகட்டத்தில் தொடங்கப்பட்டதால் இந்த மருத்துவமனை நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினருக்கு வரப்பிரசாதமாக இருந்தது. போதிய மருந்துகள் இல்லாத நிலையிலும் இந்த மருத்துவமனை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி இந்த மருத்துவமனை சுகாதாரத் துறையின் கீழ் செயல்படாமல், ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டதால் ஊராட்சியில் நிதி ஆதாரம் இல்லாத நிலை ஏற்பட்டபோது, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இந்த மருத்துவமனை மூடப்பட்டது. இதனால் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் தனியார் மருத்துவமனையை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக பூட்டிக் கிடப்பதால் மருத்துவமனை வளாகம் முழுவதும் முட்செடிகளும், புதர்களும் வளர்ந்து காட்டு பங்களா போல் காட்சியளிக்கிறது. மேலும், கட்டிடத்தின் பல இடங்களில் விரிசல் விட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே, சுகாதாரத்துறை சார்பில் நெல்லிக்குப்பம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் அல்லது ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் செயல்பட்டு வந்து மூடப்பட்ட இந்த வட்டார மருத்துவமனையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மூடிய மருத்துவமனை மீண்டும் செயல்பட வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : gooseballipam uradi ,Tirupporur ,Gooseberry ,Tirupporur Union gooseberry ,
× RELATED 24 விநாடிகளில் 50 எழுத்துகளை தட்டச்சு...