தர்மபுரி அருகே தோட்டத்தில் முனகல் சத்தம்: காட்டுப்பன்றி என துப்பாக்கியால் சுட்டதில் டிரைவர் சாவு; காதலிக்கு தீவிர சிகிச்சை: விவசாயி உள்பட 2 பேர் கைது

தர்மபுரி: தர்மபுரி அருகே நள்ளிரவில் விவசாய தோட்டத்திற்குள் தனிமையில் இருந்த ஜோடி மீது தோட்ட உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டதில், டிரைவர் பலியானார்.  தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள உலகளஅள்ளி  கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (39), டிராக்டர் டிரைவர். இவருக்கு திருமணமாகி, மனைவி, 2 மகன்கள் உள்ளனர். கடந்த 8ம் தேதி ஆறுமுகம், சிக்குமாரண்டஅள்ளி பகுதியில் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார்.  இதுபற்றி தர்மபுரி ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். உடலின் பிரேத பரிசோதனை அறிக்கையில், துப்பாக்கி குண்டின் சிதறல் இருந்தது தெரியவந்தது. இதை வைத்து ரயில்வே இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார்  விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள தோட்டத்தின் உரிமையாளர் சண்முகத்தை (45) பிடித்து விசாரணை நடத்தினர். அவர், ஆறுமுகத்தை சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும், சடலத்தை தூக்கி போட உறவினர் சின்னசாமி  உதவியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சண்முகம், சின்னசாமி (47) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது:சண்முகம், தனது  விவசாய தோட்டத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளார். அந்த பகுதியில் காட்டுபன்றி தொந்தரவு இருந்துள்ளது. இதனால், இரவில் துப்பாக்கியுடன் காவல்காத்து வந்துள்ளார். சம்பவத்தன்று, நாட்டு துப்பாக்கியுடன் சண்முகம் காவல் காத்துள்ளார்.  அந்த நேரத்தில் செடிகளுக்கிடையே இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. உடனே காட்டுப்பன்றிகள் இருப்பதாக கருதி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அப்போது, ‘‘அய்யோ... அம்மா...’’ என அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. பக்கத்தில் சென்று பார்த்தபோது, ஆறுமுகம் தலையில் குண்டு பாய்ந்து, ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. அவருக்கு அடியில் அதே பகுதியை சேர்ந்த பழனி மனைவி ராதா  (36) இருந்தார். அவரின் இடுப்பு பகுதியிலும் குண்டு பாய்ந்திருந்தது. சிறிதுநேரத்தில் ஆறுமுகம் உயிரிழந்தார். ராதா வலியால் துடித்தார். இதன்பின்தான், இரவு நேரத்தில் கள்ளக்காதல் ஜோடியினர் உல்லாசமாக இருந்தது சண்முகத்துக்கு  தெரியவந்தது.  இதனால், செய்வதறியாமல் சண்முகம் திகைத்தார். உடனே,  கொலையை மறைக்க தனது உறவினர் சின்னசாமி என்பவரின் உதவியுடன் உடலை சண்முகம் தூக்கிச்சென்றுள்ளார். அங்கு ரயில் வரும்போது, தண்டவாளத்தின்  நடுவே போட்டுவிட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். ரயில் மோதி ஆறுமுகம் இறந்ததாக ரயில்வே போலீசார் முடிவு செய்ததும், எதுவும் தெரியாததுபோல் சண்முகம் இருந்துள்ளார்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.இதனிடையே, படுகாயமடைந்த  ராதா, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.


Tags : garden ,Dharmapuri ,death , Dharmapuri, driver's death, farmer, 2 arrested
× RELATED ஏற்காடு மான் பூங்காவில் செயற்கை ரோஜா தோட்டம்