×

மேக்சிஸ் நிறுவன முறைகேடு: அமலாக்கத்துறை மேல்முறையீடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்திக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: மலேசியாவின் மேக்சிஸ் நிறுவன முறைகேடு விவகாரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீடு மனுவிற்கு ப.சிதம்பரம், அவரது மகன்  கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி நேற்று உத்தரவிட்டது.  கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விதிமுறைகளை  மீறி சுமார் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதில் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இந்த நிலையில் வழக்கில்  தங்களை கைது செய்யாமல் இருப்பதற்காக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்து வந்த நீதிமன்றம் இருவரையும் கைது செய்ய  பலமுறை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி, ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி கடந்த மாதம் 5ம்  தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி  சுரேஷ் குமார் கெயிட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா நிதி அமைச்சராக இருக்கும் ஒருவர் அந்நிய முதலீடு செய்வதற்கு ரூ600  கோடி வரை தான் அனுமதிக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் ப.சிதம்பரத்தை பொருத்தமட்டில் ரூ.3,500 கோடி வரை விதிகளை மீறி மேக்சிஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதில் சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம் வரை கையூட்டு  தொகையும் பெறப்பட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் எதையும் இந்த வழக்கில் பின்பற்றாமல் சிபிஐ நீதிமன்றம் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளதால் அதனை ரத்து செய்ய  வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி உத்தரவில், மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான வழக்கில் சிபிஐ நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவிற்கு ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன்  கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடுகிறது என தெரிவித்த நீதிபதி வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அமலாக்கத் துறை காவலுக்கு சிதம்பரம் அனுப்பப்படுவாரா?
அமலாக்கத்துறை சார்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் வரும் 17ம் தேதி முடிகிறது. இதையடுத்து, எங்களது தரப்பில் அவரை  காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. மனுவை பரிசீலனை செய்த சிபிஐ நீதிபதி அஜய் குமார் குஹர், ‘திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை வரும் 14ம் தேதி அதாவது  திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். அவரை அமலாக்கத்துறை காவல் விசாரணைக்கு அனுப்புவது தொடர்பாக அன்றைய தினம் முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும்,’ என உத்தரவிட்டார்.

Tags : Maxis ,Karthi in Enforcement Appeal case. ,Chidambaram ,Karthik , Maxis corporate abuse, p.Chidambaram, Karthi, iCord Notices
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...