×

பிரபல சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்

பெங்களூரு: உலகளவில் சாக்சபோன் இசைப்பதில் நிபுணரான கத்ரி கோபால்நாத் (70)  உடல் நலக்குறைவு காரணமாக மங்களூருவில் நேற்று காலமானார். கர்நாடகாவில் தென்கனரா  மாவட்டம், பண்ட்வாள் தாலுகா, சாஜிபமூடா கிராமத்தில்  நாதஸ்வர வித்வான்  தனியப்பா-கங்கம்மா தம்பதியரின் மகனாக கடந்த 1949ம் அண்டு டிசம்பர் 11ம்  தேதி கத்ரி கோபால்நாத் பிறந்தார். அந்த காலத்தில் சாக்சபோன்  இசையில் நிபுணராக இருந்த என்.கோபாலகிருஷ்ணன் ஐயரிடம் பயிற்சி  பெற்றார்.  அதை தொடர்ந்து செம்மங்குடி சீனிவாச ஐயரிடமும் பயிற்சி பெற்றார். கடந்த  1978ம் ஆண்டு அகில இந்திய வானொலியில் முதல் முறையாக தனது இசையை  அரங்கேற்றினார். இதில் நாடு முழுவதும் அவரின் புகழ்  பரவியது.கர்நாடக  மாநிலம் மங்களூருவில் பிறந்தவராக இருந்தாலும் அவர் வாழ்நாளில்  பெரும்பான்மையான காலத்தை சென்னையில் கழித்தார். கோபாலபுரம், கணேஷ் காலனியில்  சொந்தமாக வீடு வாங்கி தங்கி இருந்தார்.

பிரபல திரைப்பட இயக்குனர்  கே.பாலசந்தர், தான் இயக்கிய பல திரைப்படங்களில் அவரை பயன்படுத்தினார்.  அதேபோல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அதிகம் பயன்படுத்தினார். இவர் பத்ம, பத்மபூஷண் விருது உள்பட பல விருதுகள்   பெற்றுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக மங்களூருவில் உள்ள  ஏ.ஜே.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்ரி கோபால்நாத், நேற்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனி–்ன்றி காலமானார். அவரின் மறைவுக்கு  கர்நாடக  மாநில ஆளுநர் வஜுபாய் வாலா, முதல்வர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர்  தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் எம்.வீரப்பமொய்லி, எஸ்.எம்.கிருஷ்ணா,  சித்தராமையா, எச்.டி.குமாரசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், இசை   கலைஞர்கள், சங்கீத வித்வான்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 



Tags : Kadri Gopalnath ,Qadri Gopalnath , Famous saxophone musician, Kadri Gopalnath, has passed away
× RELATED புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்(69) காலமானார்