×

தீவிரவாத மிரட்டலுக்கு பயப்பட வேண்டாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புங்கள்: காஷ்மீர் அரசு விளம்பரம் மூலம் வேண்டுகோள்

ஸ்ரீநகர்: தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பயப்படாமல், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் எனபத்திரிகைகளில் காஷ்மீர் அரசு விளம்பரம் கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், 370வது சட்டப்பிரிவு கடந்த  ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அன்றிலிருந்து கடந்த 68 நாட்களாக காஷ்மீரில் கடைகள் மூடப்பட்ட உள்ளன. தீவிரவாதிகளின்  மிரட்டலுக்கு பயந்து பலர் கடைகளை திறக்காமல் உள்ளனர். இந்நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு  திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, உள்ளூர் பத்திரிக்கைகளில்காஷ்மீர் மாநில அரசு  முழு பக்க விளம்பரத்தை நேற்று கொடுத்தது. அதில் கூறியிருப்பதாவது:நாம் தீவிரவாதிகளுக்கு அடிபணிய போகிறோமா? கடந்த 70  ஆண்டுகளுக்கு மேலாக ஜம்மு காஷ்மீர் மக்கள் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளனர். பிரிவினைவாதிகளின் விஷம பிரசாரம், காஷ்மீர் மக்களை தீவிரவாதம், வன்முறை, அழிவு, ஏழ்மை என்ற பொறியில் தொடர்ந்து சிக்கவைத்துள்ளது. மக்களை  ஏமாற்ற தீவிரவாத அச்சுறுத்தலை பிரிவினைவாதிகள் பயன்படுத்தினர்.

தற்போது அதே யுக்தியை தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர். இதை நாம் பொறுத்துக் கொள்ளப் போகிறோமா? சில போஸ்டர்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் நமது தொழிலை, வாழ்வாதாரத்தை, கல்வி உரிமையை, குழந்தைகளின் எதிர்காலத்தை,  காஷ்மீரின் வளர்ச்சியை கெடுக்க அனுமதிக்க வேண்டுமா? காஷ்மீர் நமது வீடு. நமது நலன் மற்றும் வளம் பற்றி நாம்தான் சிந்திக்க வேண்டும். இதற்கு பயம் ஏன்? இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

எல்லையில் 500 தீவிரவாதிகள்
ஜம்முவில் உள்ள ராணுவ வடக்கு மண்டல தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரன்பிர் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீரில் ஊடுருவும் வாய்ப்பை எதிர்பார்த்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களில்  500 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர். தற்போது, காஷ்மீருக்குள் பாகிஸ்தான் ஆதரவுடன் 200 முதல் 300 தீவிரவாதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்,’’ என்றார்.

Tags : Terrorism, normal life, Kashmir government
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...