×

கிரிமினல் அவதூறு வழக்கு ராகுல் காந்திக்கு ஜாமீன்: குஜராத் நீதிமன்றம் உத்தரவு

அகமதாபாத்: அமித் ஷாவை கொலைக் குற்றவாளி என கூறியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில் அவருக்கு குஜராத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்  பிரசாரத்தின் போது, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘கொலைக் குற்றவாளியான அமித்ஷா பாஜ தலைவராக இருப்பது எவ்வளவு பெருமைக்குரியது?’’ என  கிண்டலடித்தார். கடந்த 2015ம் ஆண்டு நடந்த சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் அமித்ஷா விடுவிக்கப்பட்ட பிறகும் ராகுல் இவ்வாறு கூறியது குற்றமாகும் என பாஜ கவுன்சிலர் கிருஷ்ணவதன் பிரம்பத் என்பவர் குஜராத் மாஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் நேரில் ஆஜராக ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராகுல் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது அவரது தரப்பில், ராகுல் எந்த குற்றமும் செய்யவில்லை என வாதாடப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி எடாலியா, ராகுலுக்கு ஜாமீன் வழங்கினார்.
இதே போல், பணமதிப்பிழப்புக்குப் பிறகு புதிய ரூபாய் நோட்டு மாற்றுவதில் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ஊழல் நடந்ததாக ராகுல் கூறியது பற்றி அவர் மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கிலும் நேற்று அவர்  ஆஜாரானார். இந்த வழக்கிலும் ஆஜராவதில் இருந்தும் அவர்விலக்கு கோரிய மனுவை அடுத்த மாதம் 7ல் விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

₹76,600 கோடி தள்ளுபடி பிரியங்கா சரமாரி கேள்வி
எஸ்பிஐ வங்கியில் தலா ரூ.100 கோடிக்கு அதிகமாக கடன் வாங்கி செலுத்தாத 220 பேரின் வராக்கடன் ரூ.76,600 கோடியை வங்கி நிர்வாகம் தள்ளுபடி செய்திருப்பதாக ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான மீடியா தகவல்களின் அடிப்படையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘விவசாயிகள் சிறையில் தள்ளப்படுகிறார்கள். பொருளாதாரம் குழப்பத்தில் உள்ளது. மக்கள்  கொந்தளித்து உள்ளார்கள். பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் பீதியில் உள்ளார்கள். இப்படியிருக்க யாருக்காக பாஜ அரசு ரூ.76,000 கோடியை தள்ளுபடி செய்துள்ளது. யாருக்காக விரிக்கப்பட்ட சிவப்பு கம்பளம்? யார் அந்த பணத்தை எடுத்துக்  கொண்டது?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags : Gujarat ,Rahul Gandhi , Criminal defamation case, Rahul Gandhi, bail, Gujarat court
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்