×

துருக்கி படைகள் பயங்கர தாக்குதல் சிரியாவில் மீண்டும் போர்: 4.5 லட்சம் மக்களின் கதி?

டால் டேமர்: சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம் பயங்கர தாக்குதலை தொடங்கியிருக்கிறது. சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது.  அப்போது, அரசு படைகளுக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பெரும் பலம் பெற்று, நாட்டின் பல்வேறு பகுதிகளை பிடித்தது. ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளும், குர்திஷ் போராளிகளுக்கு  ஆதரவாக அமெரிக்காவும் உள்நாட்டு போரில் களமிறங்கின. இதனால் சிரியாவே சின்னாபின்னமானது. அங்கிருந்து படிப்படியாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு விரட்டி அடிக்கப்பட்டது. இதில் முக்கிய பங்கு வகித்தது குர்து படைகள்தான். அவர்கள்,  அமெரிக்காவின் ஆதரவுடன் தீவிரவாதிகளை விரட்டி, ஐஎஸ் பிடியில் இருந்த நகரங்களை மீட்டனர். ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டப்பட்டதால், சமீபகாலமாக அங்கு போர் ஓய்ந்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா தனது படைகளை வாபஸ்  பெற்றுக் கொள்வதாக அதிபர் டிரம்ப் திடீரென அறிவிப்பு வெளியிட்டார். குர்து படைகளுக்கு தந்த ஆதரவை அவர் விலக்கிக் கொண்டார்.

இதனால், குர்து படைகளுக்கு எதிராக உள்ள அண்டை நாடான துருக்கி தாக்குதல் நடத்த பச்சைக் கொடி காட்டியது போன்றதாகி விட்டது. குர்திஷ் போராளிகள் துருக்கியில் பல்வேறு நாசவேலை செய்து வருவதாக அந்நாடு குற்றம்சாட்டி  வருகிறது. இந்தநிலையில், துருக்கி ராணுவப் படை கடந்த 3 நாட்களாக எல்லைதாண்டிய தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஏவுகணைகளை வீசி குர்து படையினரை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால் சிரியாவில் மீண்டும் 2011ல் இருந்த  மோசமான நிலை திரும்பியிருக்கிறது. கடந்த 3 நாளில் குர்து படையைச் சேர்ந்த 227 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். துருக்கி எல்லையை ஒட்டிய 11 கிராமங்களை அந்நாட்டு ராணுவம் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது. எல்லையை ஒட்டி  மீண்டும் போர் தொடங்கி இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் உயிருக்கு பயந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். எல்லையை ஒட்டி வாழும் 4.5 லட்சம் மக்களின் உயிர் கேள்விக்குறியாகி உள்ளது.

Tags : Terrorist attack ,Turkey ,Syria ,forces ,war , Turkey's forces, terror attack, Syria
× RELATED துருக்கியில் கேளிக்கை விடுதியில்...