×

தேனியில் விளையாட்டு வினையானது அரசு பள்ளி வகுப்பறையில் பிளஸ் 2 மாணவன் கொலை : தள்ளி விட்ட மாணவர் கைது

தேனி: தேனி அரசு பள்ளியில் விளையாட்டின்போது நடந்த மோதலில் மாணவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மற்றொரு மாணவர் கைதானார். சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி, அல்லிநகரத்தை சேர்ந்த கொத்தனார் முருகன், சுமதி தம்பதியின் இரண்டாவது மகன் திருமால் (17). இவர் இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2  படித்து வந்தார். இவரது நண்பன் சிவன் (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று மதிய உணவு இடைவேளையில் இருவரும் வகுப்பறையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் திருமால், சிவனை தள்ளி விட்டுள்ளார்.

பதிலுக்கு சிவன், திருமாலை பலமாக பிடித்து தள்ளியுள்ளார். இந்த மோதலில் திருமாலின் பின்பக்க தலை பிளாக்போர்டு விளிம்பில் மோதியுள்ளது. இதனை கவனிக்காத சிவன் மீண்டும் பிடித்து தள்ள, பெஞ்சில் மோதிய திருமால் கீழே விழுந்தார். நண்பர்கள் இருவரும் விளையாடுவதாக மற்ற மாணவர்கள் நினைத்தனர். இதன் பின் 1.05 மணிக்கு ஆசிரியர் வகுப்புக்கு வந்தபோது, திருமால் மயங்கி கிடந்ததை பார்த்து, தலைமை ஆசிரியர் ஈஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் திருமாலை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது திருமால் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

உடனே அவரது உடல் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்ததும் மாணவரின் உறவினர்கள், பெரியகுளம் ரோட்டில் மறியல் செய்தனர். அத்துடன் பள்ளியையும் முற்றுகையிட்டனர். தேனி போலீசார் குவிக்கப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவன் சிவனை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். தேனி வட்டாரக்கல்வி அலுவலர் இளங்கோவன், மாவட்டக்கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, முதன்மைக்கல்வி அலுவலர் ரேணுகாதேவி ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

Tags : Teeni ,Government school classroom ,student murders , Plus 2 student, murder ,government school classroom
× RELATED தேனீ மாவட்டத்தில் நடை பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு