×

தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 117 சவரன் கொள்ளையடித்த விவகாரம் கொள்ளையர்களை தனிப்படையினர் தூத்துக்குடியில் சுற்றி வளைத்தனர்

சென்னை: தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 117 சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து ெசன்ற கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தூத்துக்குடியில் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹35 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரிடம் சிக்கியது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் விஸ்வநாதன்(43). தனியார் வங்கி துணை தலைவராக உள்ளார். கடந்த 6ம் தேதி வங்கிக்கு விடுமுறை என்பதால் வீட்டு சாவியை புஷ்பா நகரை சேர்ந்த வேலைக்கார பெண் சந்தியாவிடம் கொடுத்துவிட்டு, கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் உள்ள பண்ணை வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். வேலைக்கார பெண் சந்தியா வழக்கமாக வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சாவியை வீட்டின் கீழ்தளத்தில் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். விஸ்வநாதன் அன்று இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்து பெட்டியில் இருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். படுக்கை அறைக்கு சென்றபோது பீரோ கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த 117 சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு விஸ்வநாதன் தகவல் அளித்தார். நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். வீட்டின் கதவு உடைக்கப்படாமல் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால், வேலைக்கார பெண் சந்தியாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் கொள்ளையடிக்கவில்லை என்று தெரியவந்தது. வீட்டின் சாவி இருக்கும் இடத்தை தெரிந்த நபர்கள் தான் சாவியை எடுத்து வீட்டை திறந்து கொள்ளையடித்து சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதேநேரம் அடுக்குமாடி குடியிருப்பில் மேல் தளத்தில் வசிக்கும் பாண்டியன் என்ற மருத்துவரிடம் கார் ஓட்டுனராக உள்ள சந்தானராஜ்(எ)குட்டி(31) அன்றைய தினத்தில் இருந்து வேலைக்கு வரவில்லை என்று தெரியவந்தது. மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பார்த்தபோது, சந்தானராஜ் தனது நண்பருடன் வந்து மூட்டையுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சந்தானராஜை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார் சந்தானராஜின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே உள்ள அருணாச்சலபுரத்திற்கு சென்றனர். அங்கு ரகசியமாக கண்காணித்து சந்தானராஜை பிடித்து விசாரணை நடத்தினர். தனது நண்பர் காயல்பட்டினம் அருகே உள்ள அழகபுரியை சேர்ந்த அரவிந்தன்(28) என்பவருடன் சேர்ந்து திட்டமிட்டு தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 117 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்ததாக சந்தானராஜ் ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் அவரிடமிருந்து ₹35 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து கைது செய்தனர். சந்தானராஜ் மீது இதுவரை எந்த குற்ற வழக்குகளும் இல்லை. முதல் குற்றத்திலேயே கையும்களவுமாக சிக்கி கொண்டார்.

Tags : robbers ,robbery ,bank officer ,house ,Thuthakudy. 117 , 117 shaving robbery , private bank officer's house
× RELATED பட்டாக்கத்தியுடன் திரிந்த 2 ரவுடிகள் கைது