×

அழகுபடுத்தப்பட்ட மாமல்லபுரம் நகரம்

சீன அதிபரின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் நகரம் வரை வெளிநாட்டை போன்று அழகுபடுத்தப்பட்டுள்ளது. கிண்டி முதல் மாமல்லபுரம் வரை சாலைகளில் வண்ணங்கள் பூசப்பட்டு ஜொலிக்கிறது. சாலையின் இருபுறங்களும் அழகிய பூஞ்செடிகளால் அலங்கரிக்கப்பட்டும், அதற்கேற்றார் போல சிறப்பு மின் விளக்குகளால் ஜொலிக்கச் செய்துள்ளனர். அதேபோன்று மாமல்லபுரம் நகரமே சிங்கப்பூரை போன்று  அழகுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மாமல்லபுரம் சிற்பங்கள் அனைத்தும் ஆயில் கலந்த ரசாயன கலவை மூலம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்பு மாமல்லபுரம் செல்பவர்களுக்கு இது மாமல்லபுரமா அல்லது சிங்கப்பூரா என்ற சந்தேகத்தை வரவழைக்கும் அளவுக்கு அழகு நகரமாக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் மூலம் மாமல்லபுரம் வரலாற்று பெருமைகள் உலக அளவில் பேசப்படும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.  

ஒருமணி நேரம் நடந்தே சென்ற தலைவர்கள்

எந்த நாட்டின் தலைவர்களாக இருந்தாலும் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது பாதுகாப்பு கருதி வெளியிடங்களுக்கு அதிகம் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் காரில் செல்வதுதான் வழக்கமான ஒன்று. ஆனால், இந்திய பிரதமர், சீன அதிபரின் இந்த மாமல்லபுரம் சந்திப்பு என்பது உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இரு பெரும் தலைவர்களும் நீண்ட நேரம் நடந்து சென்று மாமல்லபுரம் வரலாற்று சிற்பங்களை பார்வையிட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் நடந்து சென்றே அர்ஜூனன் தபசு கலை சிற்பங்கள், வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரத பகுதிகளை பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புக்கிடையே குவிந்த மக்கள்

கிண்டியில் தங்கியிருந்த சீன அதிபர் சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். இதனால் சாலைகளில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து மாலை 4 மணியளவில் புறப்பட்ட சீன அதிபர் 4.30 மணியளவில் செம்மஞ்சேரி வந்தார். பின்னர் திருவிடந்தை, திருமால்பட்டு, வடநெம்மேலி, பேரூர், புதுகல்பாக்கம், கிருஷ்ணன்காரணை, பட்டிபுலம், தேவனேரி வழியாக 5 மணியளவில் மாமல்லபுரத்துக்கு வந்தார். சாலையின் இருபுறமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் சீன அதிபர் ஜின்பிங்கை பார்க்க வந்த பொதுமக்கள் கூட்டம் சாலையின் இருபுறங்களிலும் நிரம்பி வழிந்தது. சாலையை கடக்கும் போது பொதுமக்கள் அவருக்கு கையசைத்து உற்சாக வரவேற்பு அளித்ததோடு தங்கள் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் இந்திய மற்றும் சீன கொடிகளை காட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Tags : city ,Mamallapuram ,Beautified Mamallapuram , Beautified Mamallapuram city
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...