×

பயணிகளிடம் வரவேற்பு இல்லாததால் மெட்ரோ ரயில் -சீருந்து இணைப்பு சேவையை மேம்படுத்த வேண்டும்

சென்னை : மெட்ரோ ரயில் -சீருந்து இணைப்பு சேவைக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு இல்லாததால், அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் முதல் மெட்ரோ ரயில் திட்டத்தில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி சேவைகளை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஷேர் டாக்சி சேவையை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ஷேர் ஆட்டோ சேவையை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் மாதம்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 5ம் தேதி சென்ட்ரல், நந்தனம் உள்ளிட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் சீருந்து இணைப்பு சேவையை நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது 10க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி சேவைக்கு உள்ள வரவேற்பை போல் சீருந்து இணைப்பு சேவைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயணிகளிடம் சேவையை கொண்டுசெல்ல கூடுதல் அதிகாரிகளை நிர்வாகம் நியமனம் செய்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சீருந்து இணைப்பு சேவை தொடங்கப்பட்டு ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் ஒருசில நிலையங்களை தவிர மற்ற நிலையங்களில் போதிய வரவேற்பு இல்லை. எனவே, இச்சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களுக்கு சீருந்து இணைப்பு சேவையை மேம்படுத்தும் பணி வழங்கப்பட்டுள்ளது. சீருந்து இணைப்பு வாகனத்தில் நிலைய கட்டுப்பாட்டாளர்கள் நேரடியாக பயணம் செய்ய வேண்டும். எவ்வளவு பேர் தினந்தோறும் பயணிக்கிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இதை தினந்தோறும் அறிக்கையாக தயார் செய்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். நிலையங்களுக்கு முன்பு சீருந்து இணைப்பு சேவை குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


Tags : Connectivity Service , Metro Rail,Bus Connectivity Service
× RELATED மெட்ரோ ரயில் நிலையங்களில் சீருந்து இணைப்பு சேவையை மேம்படுத்த ஆலோசனை