×

திருச்சி நகைக்கடையில் 13 கோடி நகை கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண்

பெங்களூரு : திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல  கொள்ளையன் முருகன் பெங்களூரு மேயோஹால் 11வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  சரணடைந்தார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டார். தமிழகம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே  உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையின் மேற்குபுறம் உள்ள சுவரை துளையிட்ட மர்ம  நபர்கள் ரூ.13 கோடி மதிப்பிலான 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைரம்,  பிளாட்டினம் உள்ளிட்ட நகைகளை  கொள்ளையடித்து சென்றனர். கடந்த 2ம் தேதி  நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்து,  திருடர்களை பிடிப்பதற்கு 7 தனிப்படை அமைத்தார். இந்த தனிப்படை  நடத்திய விசாரணையில் திருவாரூர் சிராத்தோப்பைச் சேர்ந்த முருகன், அவரது  சகோதரரி கனகவல்லியின் மகன் சுரேஷ், இவரது நண்பர் மணிகண்டன் உள்பட 8 பேர்  கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இவர்களில் மணிகண்டன்  திருவாரூர் விளமல் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் பிடிபட்டார்.  இவருடன் பைக்கில் வந்த சுரேஷ் நேற்று முன்தினம் செங்கம் நீதிமன்றத்தில்  ஆஜரானார். ஏற்கனவே சிலர் இந்த வழக்கில் கைதாகியுள்ள நிலையில் கும்பல் தலைவனான முருகனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில்  பெங்களூரு கொள்ளை வழக்கு ஒன்றில் கடந்த 2015 அக்டோபர் 21ம் தேதி பானஸ்வாடி  போலீசார் முருகன் உள்பட மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய  விசாரணையில் பல போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொள்ளை வழக்குகள் என 115  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. பெங்களூருவில் கொள்ளையில்  ஈடுபட்ட முருகன் தலைமையிலான குழுவினரை ஐபிஎஸ் அதிகாரி ஹரிசேகரன் தலைமையிலான  போலீஸ் படை தான் கைது செய்தது. இந்த வழக்கு பெங்களூரு 11வது  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் ஜாமீனில்  விடுதலையாகி இருந்த முருகன், வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்ததால்  வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் நேற்று  பெங்களூரு 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகம்மா  முன்னிலையில் முருகன் சரணடைந்தார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க  நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, பானஸ்வாடி போலீசார் பலத்த போலீஸ்  பாதுகாப்புடன் பெங்களூரு-ஓசூர் சாலையில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைக்கு  கொண்டு சென்று அடைத்தனர். முருகன் மீது பெங்களூரு மட்டுமில்லாமல் தமிழகம்,  ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பல வழக்குகள் உள்ளன.

விரைந்தது தமிழக போலீஸ்

திருச்சி நகை கடை கொள்ளை வழக்கில் முருகன் முக்கிய குற்றவாளியாக  இருப்பதால், அவரை கைது செய்ய தமிழக போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.  அப்படையினர் நேற்று பெங்களூரு வந்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹரிசேகரனிடம்  ஆலோசனை நடத்தினர். தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் முருகன்  அடைக்கப்பட்டுள்ளதால், நகை கடை கொள்ளை வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த  வசதியாக நீதிமன்றத்தின் மூலம் வாரண்ட் பெறுவதற்கான முயற்சியில் தமிழக  போலீசார் ஈடுபட்டுள்ளனர். இன்று இரண்டாவது சனிக்கிழமையும், நாளை  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், வரும் திங்கட்கிழமை முருகனிடம் விசாரணை  நடத்த அனுமதிகோரி தமிழக போலீஸ் தரப்பில் பெங்களூரு 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Murugan ,Bangalore ,court ,jewelery robbery gang leader , 13 crore jewelery robbery, gang leader Murugan ,Bangalore court
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...