×

மேற்குவங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி: காங்கிரஸ் மக்களவை எம்பிக்கள் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் வலியுறுத்தல்

டெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இரண்டாவது  முறையாக மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு பிரதமரை முதல்முறையாக கடந்த மாதம் 18-ம் தேதி மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி நேரில் சந்தித்துப் பேசினார். மோடியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய  நிலக்கரி சுரங்கத்தை மேற்கு வங்கத்தில் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்கான வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. துர்கா  பூஜைகள் முடிந்த பிறகு ஒரு நாளில் சுரங்கத்தைத் திறந்துவைக்க பிரதமர் மோடி மேற்கு வங்கத்துக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளேன்.

மேலும், மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா’(Bangla) என்று மாற்ற வேண்டும் என மாநிலச் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஆனால், எங்கள் கோரிக்கையை இன்னும் மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே, இது மேற்கு வங்க மக்கள் உணர்வுகள் சார்ந்த விஷயம். அதனால்  எங்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கான பல ஆவணங்களையும் அவரிடம் அளித்துள்ளேன்.  இது அரசுக்கும் அரசுக்குமான சந்திப்பு மட்டுமே. இதில் அரசியல் பேச இடமில்லை என்றார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்பிக்கள் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி,  பிரதமர் மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசியபிறகு, சீட்டு நிறுவன மோசடி தொடர்பான விசாரணை தாமதமடைந்து  விட்டதாக தெரிவித்தார். ரயில்வே தனியார்மயமாக்கல் தொடர்பான நடவடிக்கையால் நாடு முழுமைக்கும் ரயில்வே ஊழியர்கள் இடையே பணி  பாதுகாப்பில்லாத உணர்வு நிலவுகிறது என்றார். வசதிபடைத்தவர்கள் பயணிக்கும் ரயில்களை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்றும், பாமர மக்கள்  பயணிக்கும் ரயில்களை தனியார்வசம் ஒப்படைக்க கூடாதென்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால்தான், ரயில்வேயை தனியார்மயமாக்க ஆர்வம் செலுத்துவதாகவும், தனியார்மயமாக்கலால் பிரச்னைக்கு  ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்றும் கூறினார். இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் பிரச்னையை சீன அதிபர் எழுப்பினால், பதிலுக்கு  உஹிகுர் முஸ்லிம் மக்கள் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்றும் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார். மேற்குவங்கத்தில் குடியரசுத்  தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர் என்றும், அதற்கான அவசியம் இருந்தால் குடியரசுத்  தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.


Tags : West Bengal ,Republican ,MPs leader ,Congress Lok Sabha ,Amar Ranjan ,Ati Ranjan ,MPs , Republican leader rule in West Bengal: Congress Lok Sabha MPs leader Amar Ranjan insists
× RELATED அம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை...