×

அமைதிக்கான நோபல் பரிசு 2019: எல்லை மோதலைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொண்ட எத்தியோப்பிய பிரதமருக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு

நார்வே: 2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபி அகமது அலிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்ஃபிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வேதியியல், இயற்பியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலிக்கு வழங்கப்படுவதாக விருது குழுவினர் அறிவித்துள்ளனர். அண்டை நாடான எரித்ரியாவுடானான சிக்கலான எல்லை பிரச்னையை தீர்ப்பதற்கு அவர் மேற்கொண்ட தீர்க்கமான முயற்சிகளுக்காகவும், அமைதியை ஏற்படுத்தவும், சர்வதேச ஒத்துழைப்புக்காக அவரின் முயற்சிக்காகவும், அகமது அலிக்கு விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் நார்வே நோபல் குழுவானது, அபி அகமது அலியின் முயற்சிகளுக்கு தற்போது அங்கீகாரம் மற்றும் ஊக்கம் தேவை தேவை என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைதிக்கான நோபல் பரிசு, அபி அகமது அலியின் முக்கிய பணியான அமைதி மற்றும் நல்லிணக்கித்தனை மேலும் வலுப்படுத்த உதவும் என அக்குழு நம்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடி வரும் 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க்கிற்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. எனினும் சிலர் கிரேட்டா தன்பெர்க்கிற்கு இந்தப் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கருத்து தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதிக்கான நோபல் பரிசின் தனித்தன்மை

அமைதிக்கான நோபல் பரிசு ஸ்வீடனின் வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபல் அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும். அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு, யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ, அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது, ஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10ம் தேதியன்று நார்வே தலைநகர் ஓசுலோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னிலையில் இப்பரிசு வழங்கப்படுகிறது. மற்ற நான்கு பரிசுகள் ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும் நிலையில், இப்பரிசு மட்டுமே நார்வேயில் வழங்கப்படுகிறது.



Tags : Ethiopian ,border , Peace, Nobel Prize, Prime Minister of Ethiopia, Abi Ahmed Ali
× RELATED கேரள எல்லைக்குட்பட்ட கிளிகொல்லூர்...