×

சிரியாவில் துருக்கி ராணுவம் தாக்குதல் எதிரொலி : உலக நாடுகள் கண்டனம்; தாக்குதல் கவலை அளிப்பதாக இந்தியா அறிக்கை

டமாஸ்கஸ் : அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சிரியாவில் உள்ள குர்து படையினர் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதற்கு அரபு நாடுகள், இஸ்ரேல்,பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிரியா மீது தாக்குதல் நடத்தியிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குர்து மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் செய்ய இஸ்ரேல் தயாராக இருப்பதாக தமது ட்விட்டர் பக்கத்தில் பெஞ்சமின் பதிவிட்டுள்ளார். சிரியா மீதான தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை


இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கியின் நடவடிக்கை பிராந்திய உறுதி தன்மையிலும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியா கூறியுள்ளது. துருக்கியின் நடவடிக்கையால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள இந்தியா, சிரியாவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் துருக்கி மதிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. பிரச்சனைகள் அனைத்தையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.

 தாக்குதல் குறித்து ஐ.நா.வுக்கு துருக்கி விளக்கக் கடிதம் 
 

துருக்கியின்  தாக்குதலால் சிரியாவில் நிலவி வரும்  பதற்றம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை மேற்கொண்டது. பின்னர் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ கட்டர்ஸ், உலகில் உள்ள எந்த ஒரு பிரச்சனைக்கும் ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்றார். இதனிடையே தாக்குதல் குறித்த விளக்க கடிதம் ஒன்றை ஐ.நா. சபைக்கு துருக்கி அனுப்பியுள்ளது. அதில் தங்கள் தற்காப்புக்காக சிரியாவின் வடக்கு பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிராக எல்லைப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துருக்கி கூறியிருக்கிறது.  முன்னதாக சிரியாவில் குர்து படையினர் மீது துருக்கி ராணுவம் ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. குர்து படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். துருக்கியின் திடீர் ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் உள்ளிட்ட 45 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : army attack ,attack ,World Nations ,Turkish ,Syria ,India , India, condemnation, Syrian, Kurdish forces, Foreign Ministry, Ministry, Report, Attack, Turkey
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...