×

சென்னை வரும் சீன அதிபருக்கு எதிராக கிண்டி ஓட்டலுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது!

சென்னை: சென்னை வரும் சீன அதிபருக்கு எதிராக கிண்டி ஓட்டலுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்-பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று முதல் வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக இன்று மதியம் சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், விமான நிலையத்திலிருந்து கிண்டி ஹோட்டலுக்கு சாலைமார்க்கமாகச் செல்ல இருக்கிறார். அங்கிருந்து மாலையில் மாமல்லபுரம் செல்கிறார். இதற்காக சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சென்னை வரும் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய திபெத்தியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்பையும் மீறி சீன அதிபர் தங்க உள்ள கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழா ஓட்டல் அருகே திபெத் கொடியுடன் வந்து சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 5 திபெத்தியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, கிழக்கு தாம்பரத்தில், இரு மாணவர்கள், ஒரு பெண் உள்ளிட்ட 8 திபெத்தியர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இந்த நிலையில், இன்று 5 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திபெத்திற்கு தன்னாட்சி வழங்க வலியுறுத்தி, சீன அரசியல் தலைவர்கள் எங்கு சென்றாலும் அங்கு திரளும் திபெத்தியர்கள் ஆவேசமான போராட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Five Tibetans ,hotel ,Fuindy ,Kindi , Chinese President, Tibetans, protest, Arrest, Chennai, Prime Minister Modi
× RELATED என் பெற்றோர்களே எனது வழிகாட்டிகள்!