×

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 14 கொடிய விஷ ஜந்துக்கள் பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர்

சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பார்ட்ரிக் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி  கொண்டிருந்தனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது பர்வீன் (36), சிவகங்கையை சேர்ந்த முகமது அக்பர் (28) ஆகிய 2 பேர், சுற்றுலா பயணிகளாக மலேசியா சென்று, இந்த விமானத்தில் சென்னை திரும்பினர். அவர்கள் மஞ்சள் நிற  பிளாஸ்டிக் கூடை ஒன்று வைத்திருந்தனர். அதில் என்ன இருக்கிறது என அதிகாரிகள் கேட்டபோது, ‘சாக்லெட், பிஸ்கட், மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள் இருக்கிறது’ என கூறினர். ஆனால் சந்தேகமடைந்த சுங்க  அதிகாரிகள், அந்த கூடையை திறந்தபோது, உள்ளே இருந்து 2 பெரிய பாம்புகள் தலையை நீட்டி சீறிக்கொண்டு வெளியே வந்தது. இதனால், அலறி அடித்துக்கொண்டு சுங்க இலாக்கா அதிகாரிகள் தலை தெறிக்க ஓடினர். பாம்புகளும் வெளியில்  குதித்து தரையில் தவழத்தொடங்கியது. தரை வழவழப்பாக இருந்ததால் அதனால் ஓட முடியவில்லை.  

அங்கிருந்த ஊழியர்கள் தடியை எடுத்து வந்து, பாம்புகளை அடிக்க வந்தனர். அதிகாரிகள் அவர்களை தடுத்து அந்த பாம்புகளை கொம்புகளால் தூக்கி பெட்டிக்குள் அடைத்தனர். மேலும் கூடைக்குள் உடும்பு, மரப்பல்லிகள் போன்ற 14 வகை விஷ  ஜந்துக்கள் இருந்தன. அதனையும் அதிகாரிகள் கைபற்றினர். இதுபற்றி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்கியல் மருத்துவர்களுக்கும் தகவல் கொடுத்தனர். நேற்று  காலை வனத்துறை அதிகாரிகள் வந்து அவைகளை ஆய்வு செய்தனர். இரண்டு பாம்புகளில் ஒன்று கிரீன் ட்ரீ பைத்தான் என்ற ஒரு வகை கொடிய விஷத் தன்மையுடையது என்றும் மற்றொன்று கருப்பு கலரில் எஸ்சிஆர்யூபி என்று  சொல்லக்கூடிய இதுவும் கொடிய விஷம் கொண்ட பாம்பு என தெரியவந்தது. இவைகள் ஆஸ்திரேலிய நாட்டு வனப்பகுதியில் வகிக்கும் அபூர்வ வகை பாம்புகள் என தெரியவந்தது.

அதேபோல் 14 உடும்பு,  பல்லிகள் இருந்தன. இவை, பிலிப்பைன்ஸ் நாட்டு காடுகளில் வசிப்பவை. இவைகளும் கொடிய விஷம் உடையவை என தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை விலங்கியல் மருத்துவர்கள், சுங்கத்துறை அதிகாரிகள்  கூட்டாக ஆய்வு நடத்தினர். இது பற்றி டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டனர். டெல்லியில் உள்ள இந்திய விலங்கியல் துறையினர், ‘இது வெளிநாடுகளில் இருந்து வரும் உயிரினங்கள். உரிய மருத்துவ பரிசோதனை  இன்றி இந்தியாவில் அனுமதிக்க முடியாது. அதனால் பல்வேறு நோய் கிருமிகள் நம் நாட்டில் பரவிவிடும். எனவே அவைகளை மீண்டும் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பும் படியும், அதற்கான செலவுகளை அதை கடத்தி வந்தவர்களிடம்  வசூலிக்க வேண்டும்’  என கூறினர்.

அதன்படி இன்று அதிகாலை ஒரு மணிக்கு சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் அதே பாட்ரிக் விமானத்தில் அனுப்பி வைத்தனர். கடத்தல் ஆசாமிகள் 2 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
 இதை எதற்காக  கடத்தி வந்தீர்கள், என கேட்ட போது,  சென்னையில் உள்ள ஒருவரிடம் கொடுக்கும் படி  மலேசியவில் உள்ள ஒருவர் எங்களுக்கு இந்த கூடையை தந்தார். இதற்காக சென்னையில் உள்ள அந்த நபர் எங்களுக்கு தலா ₹25  ஆயிரம் தருவதாக கூறினார். எனவே இதனை கொண்டு வந்தோம்’’ என கூறினர். ஆனாலும் சுங்க அதிகாரிகள், இதை சென்னையில் வாங்க இருந்தவர் யார்? என கேட்டு பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Tags : Malaysia ,giants , Malaysia, poisonous animals, confiscation
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...