×

நடவடிக்கை எடுக்காமல் இருக்க 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் கைது: கணக்கில் வராத 1.26 லட்சம் பறிமுதல்

சென்னை: கூடுதல் விலைக்கு மது விற்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருவள்ளூர் கிழக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளரை சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் (கடை எண் 4127) மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் (41). இவரது கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்ய திருவள்ளூர் கிழக்கு மாவட்ட  டாஸ்மாக் மேலாளர் ராமச்சந்திரன் (50) சென்றார்.அப்போது கடையில் விற்ற சரக்குகளுக்கும், பெட்டியில் வைத்திருந்த பணத்துக்கும் வித்தியாசம் இருந்தது. இதையடுத்து, ‘கூடுதல் விலைக்கு சரக்குகளை விற்கிறாயா?’’ எனக்கூறி,  விசாரணைக்கு 10ம் தேதி திருமழிசையில் உள்ள திருவள்ளூர் கிழக்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்துக்கு வருமாறு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

அதன்படி சுரேஷ் நேற்று முன்தினம் விசாரணைக்கு சென்றார். அப்போது, ‘50 ஆயிரம் லஞ்சம் வழங்கினால் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறேன்’ என மாவட்ட மேலாளர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்  இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வெற்றி மற்றும் போலீசாரின் அறிவுரைப்படி சுரேஷ் தன்னிடம் 30 ஆயிரம் மட்டும் உள்ளதாக கூறி, நேற்று முன்தினம் இரவு  பணத்தை ராமச்சந்திரனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஓழிப்பு போலீசார் மாவட்ட மேலாளர் ராமச்சந்திரனை கைது செய்தனர்.  இதை தொடர்ந்து அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.  இதில், கணக்கில் வராத பணம் 1.26 லட்சம் சிக்கியது. அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாவட்ட மேலாளர் ராமச்சந்திரனை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : Task force manager , 30 thousand, bribery, task manager, arrested
× RELATED நடவடிக்கை எடுக்காமல் இருக்க 30 ஆயிரம்...