×

ஆன்லைன் மூலம் தரமற்ற காய்கறி விற்பனை: சரக்கு வேனை சிறைபிடித்து வியாபாரிகள் சாலை மறியல்

அண்ணாநகர்: ஆன்லைன் வர்த்தகம் மூலம் தரமற்ற காய்கறிகள் விற்பனை செய்ய முயன்ற சரக்கு வேனை, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் சில  ஆன்லைன் வர்த்தகம் மூலம் காய்கறிகளை குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை கிடங்குகளில் வைத்து, பற்றாக்குறை நேரத்தில் அவற்றை அதிக விலைக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பதாக கூறப்படுகிறது. மேலும், இவ்வாறு  விற்கப்படும் காய்கறிகள் தரமற்ற முறையில் இருப்பதால், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், தரமற்ற காய்கறிகளை கோயம்பேடு மார்கெட்டில் விற்பனை செய்பவர்களை வியாபாரிகள்  கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு, தரமற்ற காய்கறிகளை கோயம்பேடு மார்க்கெட் கொண்டு வந்து விற்க முயன்ற சரக்கு வேன் ஒன்றை, கோயம்பேடு வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர், ரவி  ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சிறைபிடித்தனர்.

தொடர்ந்து, சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை கோரி, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவலறிந்து கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் சம்பவ இடத்துக்கு வந்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பின்னர், தரமற்ற காய்கறிகளை ஏற்றி வந்த வேனை பறிமுதல் செய்தார். இந்த வேனில் கொண்டு வரப்பட்ட காய்கறிகள் தரமானதா என்பதை பரிசோதனை செய்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சண்முகசுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டது.  அதில் 7 மூட்டைகளில் அழுகிய காய்கறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கூட்டமைப்பு சங்க தலைவர் ராஜசேகர் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி  விளைச்சலாகி வரும் காய்கறிகள், பழங்கள் நேரடியாக விற்பனைக்கு வருகிறது. அதனை நாங்கள் அன்றைய தினமே விற்பனை செய்து விடுகிறோம்.

ஆனால், தனியார் சிலர் ஆன்லைன் மூலம் இந்த காய்கறிகளை மொத்தமாக வாங்கி, அதனை நாள் கணக்கில கிடங்கில் தேக்கி வைத்து, விற்பனை செய்து வருகின்றனர். விற்பனை போக மீதமுள்ள தரமற்ற காய்கறிகளையும் குறைந்த  விலைக்கு இங்குள்ள சில கடைகளில் சப்ளை செய்து வருகின்றனர். இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே இதனை தடுக்க  வேண்டும்’’ என்றனர். கோயம்பேடு வணிக வளாக நிர்வாக அதிகாரி கோவிந்தராஜ், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து விபாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் கோயம்பேடு மார்கெட்டில் சிறிது நேரம் பரபரப்பு  ஏற்பட்டது.

Tags : Vendors ,Roads ,Cargo Vendors , Online, Merchants, Road Pickup
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...