×

அதிபர் டிரம்ப் மீது கண்டன தீர்மானம்: மாஜி துணை அதிபர் பிடன் வலியுறுத்தல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன் வலியுறுத்தி உள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு  நடைபெறுகிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிட முயன்று வருகிறார். இதற்காக,  அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக, அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இவரை வீழ்த்த வியூகம் வகுத்த அதிபர் டிரம்ப், ஜோ பிடனையும் அவரது மகன் ஹண்டரையும் உளவாளிகளை கொண்டு வேவு பார்க்கும்படி, அவர் செய்த உதவிக்கு  கைமாறாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் கேட்டுக் கொண்டார். இந்த ஆடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டிரம்ப் மீது ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் கண்டன தீர்மானம் கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நியூ ஹாம்ப்ஷையரில் நடந்த அதிபர் வேட்பாளருக்கான பிரசாரக் கூட்டத்தில்  ஜோ பிடன் பேசியதாவது: அதிபர் டிரம்ப் தனது சொல், செயல்களின் மூலம் தான் ஒரு குற்றவாளி என்பதை நிரூபித்துள்ளார். பிரதிநிதிகள் சபையின் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுப்பதன் மூலம், ஏற்கனவே அவர் குற்றவாளி என்பது  நிரூபிக்கப்பட்டு விட்டது. நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகம், ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்க, அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும்.

ஜனநாயக கட்சியின் எம்பி.க்கள் ஒருங்கிணைந்து கண்டன தீர்மானத்துக்கு ஆதரவளித்து அதனை நிறைவேற்ற வகை செய்ய வேண்டும்.உக்ரைன் அதிபருடன் அவர் பேசிய ஆடியோ மூலம், அவர் தவறு செய்திருப்பதற்கு போதிய ஆதாரங்கள்  இருப்பது தெளிவாக தெரிகிறது. தன்னுடைய அதிகாரம் என்னவென்று தெரியாத ஒருவர், நாட்டின் அதிபராக இருப்பது அமெரிக்க ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அவரது அரசியல் தேவைகளை பூர்த்தி செய்ய நாடு முழுவதும் ஊழலை  பரப்பிடுவார். இவ்வாறு பிடன் பேசினார்.

டிரம்ப் பதிலடி
பிடனுக்கு பதிலடி கொடுத்துள்ள டிரம்ப், பிடன் தான் ஊழல்வாதி. அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளது. அவர் 2 பில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் பெற்றுள்ளார். அது அவருடைய வக்கீலுக்கு பீஸ் கொடுப்பதற்காக  என்று நினைக்கிறேன். அந்த தொகை திருப்பி தரப்படாது. பிடனின் மகனுக்கும் சீனா, உக்ரைனில் இருந்து சுமார் 3 பில்லியன் டாலர் கிடைக்கிறது. பிடனின் மகன் தற்போது கடற்படையில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இப்படி ஊழலில்  திளைக்கும் ஒருவர் ஊழல் பற்றி பேசுவதால் அவரது புகழ் சரிந்து வருகிறது. பின்னர், அவர் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு குறையும்,’’ என்றார்.



Tags : Trump: Maj ,Biden , President Trump, Maj. Vice President Biden
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை