விஜய் ஹசாரே டிராபி: கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் வெற்றி

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பைக்கு எதிராக ஆடிய கர்நாடகா அணியும், ம.பி.,க்கு எதிராக ஆடிய ஜம்முகாஷ்மீர் அணியும் வெற்றி பெற்றது. விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில்  நடந்து வருகிறது. பெங்களூருவில் நேற்று நடந்த போட்டியில் கர்நாடகா அணியும், மும்பை அணியும் மோதியது. முதலில் ஆடிய கர்நாடகா அணி 50 ஓவரில் 312 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்கவீரர் தேவ்டூட் படிக்கல் 79 ரன்னும்,  கேப்டன் மனீஷ்பாண்டே 62 ரன்னும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய மும்பை அணியில் சிவம் டியூப் மட்டும் அதிரடியாக ஆடினார். அவர், 118 ரன் குவித்தார். 50 ஓவர் முடிவில் 303 ரன்னுக்கு மும்பை ஆல்அவுட் ஆனது. இதனால்,  கர்நாடகா அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மத்தியபிரதேசம்-ஜம்முகாஷ்மீர் அணிகள் மோதிய போட்டியில், 4 விக்கெட் வித்யாசத்தில் ஜம்முகாஷ்மீர் அணி வெற்றி பெற்றது. இதேபோல், சட்டீஸ்கர்-ஜார்கண்ட் அணிகள் மோதிய போட்டியில் சட்டீஸ்கர் அணியும், பெங்கால்-பீகார்  அணிகள் மோதிய போட்டியில் 9 விக்கெட் வித்யாசத்தில் பெங்கால் அணியும் வெற்றி பெற்றது. பெங்கால் அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் 112 ரன் குவித்தார். டெல்லி-ஒடிஷா அணிகள் மோதிய போட்டியில் டெல்லி அணியும்,  இமாச்சலபிரதேசம்-அரியானா போட்டியில் இமாசலபிரதேச அணியும், அருணாசலபிதேசம்-புதுச்சேரி அணிகள் மோதிய போட்டியில் புதுச்சேரியும், அசாம்-சிக்கிம் போட்டியில் அசாம் அணியும், ஆந்திரா-ஐதராபாத் அணிகள் மோதிய போட்டியில்  ஐதராபாத் அணியும் வெற்றி பெற்றது.  தமிழ்நாடு அணி நாளை (12ம் தேதி), மத்திய பிரதேச அணியுடன் மோதவுள்ளது. இதுவரை விளையாடிய அனைத்து போட்டியிலும் (7 போட்டி) தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Karnataka ,Vijay Hazare Trophy ,teams ,Jammu ,Kashmir , Vijay Hazare Trophy: Karnataka, Jammu and Kashmir teams win
× RELATED கர்நாடகாவில் அமைச்சர் பதவிகேட்டு...