×

நாகரீகத்தில் முன்னோடியாக திகழ்ந்த சிந்து சமவெளி மக்களுக்கு உருவம் கொடுத்த விஞ்ஞானிகள்: நவீன தொழில்நுட்பத்தில் புதிய முயற்சி

புதுடெல்லி: சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்த நாகரீக மக்களுக்கு உருவம் கொடுக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். உலகின் மிக தொன்மையான நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம். இந்தியா-பாகிஸ்தான் இடையே ஓடும் சிந்து  நதியை ஒட்டி வாழ்ந்த மக்கள் கி.மு 3000க்கும், கி.மு 2500க்கும் இடைப்பட்ட காலத்திலேயே நாகரீக வாழ்க்கை வாழ்த்துள்ளதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனாலும், சிந்து சமவெளி மக்களின் தோற்றம் எப்படியிருக்கும் என்பது  பற்றி யாருக்கும் தெரியாது. அரியானாவின் ராக்கிகர்கி பகுதி, மிகப்பெரிய சிந்து சமவெளி இடங்களில் ஒன்று. இங்கு 4500 ஆண்டுகள் பழமையான மயானத்திலிருந்து 37 பேரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றின் வரைபட தகவல்களை வைத்து ‘கிரானியோபேசியல் ரீகன்ஸ்ட்ரக்‌ஷன்’ (சிஎப்ஆர்) என்ற தொழில்நுட்பம் மூலம், சிந்து சமவெளி மக்களுக்கு உருவம் கொடுக்கும் பணியில் தென்கொரியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள  6 மையங்களைச் சேர்ந்த 15 விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞானி லீ மற்றும் டெக்கான் கல்லூரி முதுநிலை ஆராய்ச்சி மைய பேராசிரியர் வசந்த் ஷிண்டே தலைமையிலான இந்த குழுவினரின் இந்த ஆய்வறிக்கை ‘அனாடமிக்கல் சயின்ஸ்  இன்டர்நேஷன்ல் என்ற இதழில் வெளியாகியுள்ளது. இது குறித்து ஷிண்டே கூறியதாவது: சிந்து சமவெளி மக்கள் எப்படி இருப்பார்கள் என்பது பற்றி யாருக்கும் தெரியாது.

ஆனால், தற்போது, எங்களுக்கு சில கருத்துக்கள் ஏற்பட்டுள்ளது. சிந்து சமவெளி மயானங்கள் பற்றி இதுவரை போதுமான அளவு ஆய்வு செய்யப்படவில்லை என்பதால், அங்கு வாழ்ந்த மக்களின் உருவம் இப்படித்தான் இருக்கும் என நிருபிப்பது  சிரமமாக இருந்தது. மொகஞ்சசோதராவில் கண்டுபிடிக்கப்பட்ட மன்னர் உருவம் தவிர, சிந்து சமவெளி மக்கள் உருவம் பற்றி கலை வடிவிலான எந்த ஆதாரமும் இல்லை. ராக்கிகர்கி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 2 பேரின் எலும்புக்கூடுகளை  வைத்து சிஎப்ஆர் தொழில்நுட்பம் மூலம் சிந்து சமவெளி மக்களுக்கு உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு உருவங்களின் 3டி வீடியோவை பார்க்கும்போது, சிந்து சமவெளி மக்கள் காக்கேசிய இன மக்களை போல் தோற்றம் அளித்தனர்  என்றார்.


Tags : Scientists ,Indus Valley , Indus plains, modern technology
× RELATED திருச்சி தேசிய அறிவியல் மாநாட்டிற்கு...