×

மஜத, விவசாய சங்கத்தினர் பெங்களூருவில் பிரமாண்ட பேரணி: மக்கள் கடும் பாதிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜ அரசுக்கு எதிராக மதசார்பற்ற ஜனதா தளமும், கர்நாடக மாநில விவசாய சங்கமும் பெங்களூருவில் நேற்று பிரமாண்ட பேரணி  நடத்தின. கர்நாடகாவில் கடந்த ஆகஸ்ட்டில் பெய்த கனமழை காரணமாக 22  மாவட்டங்கள் வெகுவாக  பாதிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கில் சிக்கி, 80 பேர் உயிரிழந்தனர். இந்த சேதத்துக்கு மத்திய அரசு  நிவாரண நிதி வழங்காமல் இழுத்தடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த  நிலையில், கடந்த சனிக்கிழமை  வெள்ள நிவாரண நிதியாக ரூ.1,200 கோடி வழங்குவதாக  மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ரூ.10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில்,  கர்நாடகா சட்டபேரவை கூட்டம் நேற்று  தொடங்கியது. அதே நேரம், வெள்ள நிவாரண பணிகளை மாநில அரசு சரியாக  கையாளவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கவில்லை,  விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை உட்பட பல  குற்றச்சாட்டுகளை முன்வைத்து மஜத சார்பில் நேற்று காலை பெங்களூருவில் விதானசவுதாவை   நோக்கி ஊர்வலம் நடந்தது. இதற்கு, முன்னாள் பிரதமரும், கட்சியின் தேசிய  தலைவருமான தேவகவுடா தலைமை தாங்கினார். அதேபோல்,  விவசாயிகள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கர்நாடக மாநில விவசாய  சங்க  தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமையில் விதானசவுதாவை நோக்கி, பெங்களூரு சிட்டி ரயில்  நிலையத்தில் இருந்து பேரணியாக சென்றனர். இந்த பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதால், பெங்களூரு மாநகரமே  திணறியது. போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தை தோல்வி
அரசுக்கு  எதிராக பேரணி நடத்திய விவசாய சங்க நிர்வாகிகள், கோடிஹள்ளி சந்திரசேகர்  தலைமையில் துணை முதல்வர் லட்சுமண் சவதியை சந்தித்து மனு கொடுத்தனர். அவருடன் தங்கள்  கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை  நடத்தினர். 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், விவசாய சங்கத்தினரின் கோரிக்கைகளுக்கு சரியான பதில்  கிடைக்காததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.



Tags : rally ,Bengaluru ,unions ,peasant ,Majada ,peasant union , Majestic, Agricultural Society, Bengaluru, Massive Rally
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி