×

பி.எம்.சி. வங்கி மோசடி: டெபாசிட்தாரர்களுக்காக ரிசர்வ் வங்கியுடன் பேசுவேன்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

மும்பை: பி.எம்.சி. வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்களுக்காக ரிசர்வ் வங்கி கவர்னருடன் பேசுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று உறுதி அளித்தார்.  மும்பையில் உள்ள பாஜ அலுவலகத்தை நேற்று பிஎம்சி வங்கி  வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம், மும்பை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு நடத்தினார். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பஞ்சாப் மற்றும்  மகாராஷ்டிரா கூட்டுறவு (பி.எம்.சி.) வங்கியில் நடந்துள்ள 4,355 கோடி முறைகேடு தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் அமலாகத்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள  எச்.டி.ஐ.எல். ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர்கள் ராகேஷ் வதாவன் மற்றும் அவருடைய மகன் சாரங் வதாவன், பி.எம்.சி. வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் முன்னாள் சேர்மன் வார்யம் சிங்  ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பி.எம்.சி. வங்கியின் செயல்பாட்டிற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால்  வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலையொட்டி மத்திய நிதியமைச்சர் நேற்று மும்பை, நரிமன் பாயின்ட் பகுதியில் உள்ள பாஜ தலைமையகத்துக்கு வந்தார். அவர் அங்கு  வரவிருப்பதைப் பற்றி கேள்விப்பட்ட பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் அந்த அலுவலத்தை முற்றுகையிட்டனர்.  நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து பேசினார். ரிசர்வ் வங்கி கவர்னரிடம் மீண்டும் இந்த விவகாரத்தை கூறுவதாக உறுதி  அளித்தார். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘‘பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து போராட துறை வாரியாக தீர்வு காணப்படும்’’ என்றார். அதேசமயம் நாடு இப்போது பொருளாதார வீழ்ச்சியில் இருக்கிறதா என்று கேட்டதற்கு  நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். ‘‘எந்த துறைக்கு உதவி தேவைப்படுகிறதோ அத்துறைக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.



Tags : Nirmala Sitharaman ,RBI ,depositors , Piemci Bank fraud, RBI and Finance Minister Nirmala Sitharaman
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...