×

மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

சூரத்: தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேற்று சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலம்,  கோலாரில் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களின் பெயரும் மோடியாகவே உள்ளது?’ என்று கூறியிருந்தார். ராகுலின் இந்த  கருத்துக்கு பாஜ தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்னர். மேலும், இது தொடர்பாக மேற்கு சூரத் சட்டமன்ற தொகுதி பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி, ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதற்கு நேரில் ஆஜராகி பதில் அளிக்கும்படி  ராகுலுக்கு நீதிபதி கபாடியா உத்தரவிட்டார். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுலுக்கு நீதிமன்றம் விலக்கு அளித்தது.

இந்நிலையில், சூரத் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு மீண்டும்  விசாரணைக்கு வந்தது. வெளிநாடு சென்றிருந்த ராகுல்  நேற்று நாடு திரும்பினார். பின்னர், வழக்கு விசாரணைக்காக சூரத் நீதிமன்றத்தில் நீதிபதி கபாடியா முன்னிலையில்  அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, ‘தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி குறித்து விமர்சிக்கவில்லை.’ என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து ராகுலுக்கு வழக்கு விசாரணையின்போது ஆஜராவதில் இருந்து நிரந்தரமாக  விலக்கு அளிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு மனுதாரரின் வழக்கறிஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணையை டிசம்பர் 10ம் தேதிக்கு  நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டரில், ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், என்னை மவுனமாக்க விரும்பியும் என் மீது தொடரப்பட்ட  அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக சூரத் வந்தேன். எனக்கு அன்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கும்  வகையில் திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.  இதேபோல், ஆர்எஸ்எஸ், பாஜ தொண்டர்கள் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக இன்று அகமதாபாத்  நீதிமன்றத்தில் ராகுல் ஆஜராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுதினம் பிரசாரம்
மகாராஷ்டிரா, அரியானாவில் வருகிற 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி திடீரென வெளிநாடு பயணம் சென்றார். அவர் எங்கு சென்றார் என்ற விவரங்களை கட்சி வெளியிடவில்லை. இதனிடையே,  சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில், ராகுல் வெளிநாடு பயணம் சென்றிருப்பது குறித்து பாஜ கடுமையாக விமர்சித்து வந்தது. இந்நிலையில் ராகுலின் பிரசாரம் குறித்த விவரங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில், அக்ேடாபர் 13  மற்றும் 15ம் தேதி மகாராஷ்டிராவிலும், 14ம் தேதி அரியானாவிலும் ராகுல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Rahul Azhar ,Gujarat ,court , Modi, Gujarat Court, Rahul
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...