×

மோடியின் உயரிய செயலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதா? காங்கிரசுக்கு அமித்ஷா கண்டிப்பு

சங்லி: ‘`காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிரதமர் மோடியின் உயரிய செயலுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது,’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். மகாராஷ்டிரா, அரியானா  மாநிலங்களில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 24ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையடுத்து, இம்மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.  மகாராஷ்டிராவை பொருத்தவரை மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜ 164, சிவசேனா 124 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியை ஆதரித்து பிரதமர் மோடி 9 கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். அதே  போன்று பாஜ தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, நட்சத்திர பேச்சாளர்கள் 18 பிரசார கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தில் உள்ள ஜாத் நகரில் பாஜ தேர்தல் பிரசாரக் கூட்டம் பாஜ தலைவர் அமித்ஷா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அமித்ஷா, `காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன்  மூலம் பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளார். சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மோடியின் சிறந்த செயலுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ராகுல் காந்தியும், சரத்பவாரும் இதனை  ஆதரிக்கின்றனரா, இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ``மோடியின் ஆட்சியில் தேசத்தின் பாதுகாப்பு வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு மகாராஷ்டிராவுக்கு  என்ன செய்தது என்பதை சரத்பவார் விளக்க வேண்டும்,’’ என்று கூறினார்.

Tags : Modi ,Congress ,Amit Shah ,Opposition , Modi, Amit Shah ,Congress
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...