×

சீன அதிபர் வருகை நேரத்தில் பயங்கரம் அண்ணாசாலையில் ரவுடிகள் வெடிகுண்டு வீசி மோதல்

* பெண் வக்கீல், ரவுடி படுகாயம்
* பொதுமக்கள் சிதறி ஓடினர்

சென்னை: அண்ணாசாலையில் பட்டப்பகலில் ரவுடி கும்பல் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டுகள் வீசியும் மோதி கொண்டனர். இதில் பெண் வக்கீல், ரவுடி படுகாயமடைந்தனர். சென்னை ராயப்பேட்டை பார்டர் தோட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி  தோட்டம் சேகர்(55). ராயப்பேட்டை பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர். இவரை கடந்த 2001ம் ஆண்டு ரவுடி சிவகுமார் தலைமையிலான ஆட்கள் கொலை  செய்தனர்.பிறகு 3 ஆண்டுகள் கழித்து கடந்த 2003ம் ஆண்டு தோட்டம் சேகர் ஆட்களான புல்லட் குமார் தலைமையிலான ஆட்கள் சிவகுமார் தம்பியை பேச்சுவார்த்தைக்கு  அழைத்து சரமாரியாக வெட்டி கொன்று பழி தீர்த்தனர். அதேபோல் மார்க்கெட்  முரளியும் கொலை செய்யப்பட்டார். இறந்துபோன தோட்டம் சேகருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். மூன்றாவது மனைவி மலர்கொடி(50). இவர் வக்கீலுக்கு படித்து வருகிறார். மலர் கொடிக்கு அழகுராஜா(31) என்ற மகன் உள்ளார். அழகு ராஜாவும் ராயப்பேட்டை பகுதியில்  ரவுடியாக வலம் வருகிறார். இவர் மீது கொலை உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளது. இந்நிலையில், அழகு ராஜா வழக்கு தொடர்பாக நேற்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன்  அவரது தாய் மலர்கொடி சென்று இருந்தார். வழக்கு முடிந்து மலர்கொடி மற்றும் அவரது மகன் அழகுராஜா ஆகியோர் நேற்று மதியம் 12.30 மணிக்கு ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டனர். அவர்களுடன் பாதுகாப்புக்கு அழகுராஜாவின்  கூட்டாளிகளான திண்டிவனத்தை சேர்ந்த மணிகண்டன்(19) மற்றும் சூளைமேட்டை சேர்ந்த விஜயகுமார்(30) ஆகியோர் ஆட்டோவில் பின் தொடர்ந்து வந்தனர்.

இவர்கள் கேசினோ தியேட்டர் அருகே வரும் போது, திடீரென எதிர் திசையில் 3 பைக்கில் வந்த 6 பேர் வக்கீல் மலர்கொடி மற்றும் அவரது மகன் அழகு ராஜாவை கண்ணிமைக்கும் நேரத்தில்  அரிவாளால் அழகு ராஜா மற்றும் அவரது தாய்  மலர்கொடியை வெட்டினர். இதில் அழகுராஜாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அழகு ராஜா ஆட்டோவில் மறைத்து எடுத்து வந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து அரிவாளால் வெட்டிய 6 ரவுடி கும்பல் மீது வீசினார். ஆனால்  நாட்டு வெடிகுண்டு சாலையில் விழுந்து பயங்கர சத்தத்துடன் கரும் புகையுடன் வெடித்து சிதறியது. இதில் பொதுமக்கள் காயமடைந்தனர். வெடிகுண்டை பார்த்த கொலை கும்பல் உயிர்தப்ப அழகுராஜாவை வெட்டுவதை விட்டுவிட்டு ஓடினர்.  நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பிளாக்கர் சாலையில் இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார். இதனால் அண்ணாசாலை சிறிது நேரம் போர்களம் போல் காட்சி அளித்தது.இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அழகுராஜா மற்றும்  அவரது தாய் மலர் கொடி ஆகியோர் அருகில் உள்ள திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். பிறகு போலீசார் தலையில் காயமடைந்த அழகுராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். மலர்கொடியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் இதற்கிடையே அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற 6 பேரில் 2 பேரை, அண்ணாசாலை போலீசார் தனியார் ஓட்டல் முன்பு மடக்கி பிடித்தனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், மயிலாப்பூர் ரவுடி சிவகுமார் ஆட்களான அரவிந்தன் மற்றும் அப்புனு (எ) அப்பு என தெரியவந்தது. முன் பகை காரணமாக அழகு ராஜாவை கொலை செய்ய 6 பேர்  திட்டமிட்டு வந்ததாகவும், அழகு ராஜா நாட்டு வெடிகுண்டு வீசியதால் தப்பி ஓடியதாகவும் தெரிவித்தனர். அதைதொடர்ந்து அண்ணாசாலை போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேரையும் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.மேலும், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் ரவுடி சிவகுமார் தரப்பு ஆட்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல், வக்கீல் மலர்கொடி மற்றும் அவரது மகன் அழகுராஜா மற்றும் அவரது நண்பர்களான மணிகண்டன்,  விஜயகுமார் ஆகியோர் மீது  வெடிகுண்டு பயன்படுத்தியது. கொலை முயற்சி, பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அழகு ராஜாவிடம் இருந்த வெடிக்காத நாட்டு வெடிகுண்டு ஒன்றை  போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேநேரம் கடந்த ஆண்டு காங்கிரஸ் பிரமுகர் அப்பாசை கொலை செய்த இம்ரான் தரப்புக்கு வெட்டு பட்ட அழகுராஜா பல வகையில் பண உதவிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பாஸ் தரப்பை சேர்ந்த ஷேக் என்பவர்  தூண்டுதலின் பேரில் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.  சீனா அதிபர் இன்று சென்னை வரும் நிலையில் மிகுந்த பாதுகாப்பு நிறைந்த அண்ணாசாலையில் ரவுடிகள் பட்டபகலில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் மோதி கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.



Tags : Bombers ,visit ,President ,Chinese ,Annapolis ,Rannadis , Terror, Chinese President, Bombers , Rannadis
× RELATED பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி குமரி சுற்றுலா படகு சேவை நிறுத்தம்!!