×

தமிழகத்தை பற்றி 2ம் நூற்றாண்டிலேயே நன்கு அறிந்த சீனர்கள்

* சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் வணிக தொடர்பு * கோயிலை கட்டிய அரசர்கள் l வரலாற்று ஆய்வின் மூலம் அரிய தகவல்

1956ல் டிசம்பர் 5ம் தேதி அன்றைய சீனப் பிரதமர் சூஎன்லாய் இரண்டு நாள் பயணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தார். அன்றைய சென்னை மாகாண ஆளுநராக பிரகாசாவும், முதல்வராக காமராஜரும் இருந்தனர்.  சென்னை மாநகராட்சி மைதானத்தில், இன்றைய நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெமினி ஸ்டூடியோவில் படப்பிடிப்பை பார்த்து வியந்தார். பின்னர் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை போன்ற  இடங்களுக்கு சென்று சீனப் பிரதமர் சூஎன்லாய் பார்வையிட்டார். அங்கிருந்த வரவேற்பு புத்தகத்தில், ‘இப்படி நவீனமாக ரயில் பெட்டி தயாரிப்பது சிறப்பாக இருக்கிறது. இந்தியா இதில் பெருமை கொள்ள வேண்டும்’ என்று எழுதியிருந்தார்.  ஆளுநர் மாளிகையில் அன்றைய ஆளுநர் பிரகாசா இரவு விருந்தளித்தார். ஜி.யு. போப்பின் திருக்குறள் ஆங்கில மொழியாக்க புத்தகத்தை கவர்னர் வழங்கினார் .அடுத்த நாள் இன்றைக்கு ஈ.சி.ஆர் என்று சொல்லப்படுகின்ற கிழக்கு கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம் சென்று பல்லவர்களின் சிற்பங்களையும் கண்டுகளித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மாமல்லபுரத்திற்கும், புத்தமதத்திற்கும்  சீனாவில் உள்ள வரலாற்றுத் தகவல்களையும் சொன்னபோது, தன் உதவியாளரிடம் குறிப்பு எடுத்துக் கொள்ள சூஎன்லாய்அறிவுறுத்தினர்.இந்தநிலையில், சீன அதிபர் ஜின்பிங் 63 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார். அவரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சீன அதிபரின் வருகை உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்களும் சீன அதிபரை வரவேற்கின்றனர். அதற்கு காரணம், சீனர்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்புதான்.

இதுகுறித்து, பல்வேறு வல்லுநர்களும் ஆதாரங்களுடன் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தொல்லியல்துறை (ஓய்வு) தரன்: நமது இந்திய நாடும் சீன நாடும் தொன்மையான நாகரீக வரலாற்றை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது குறிப்பாக, தமிழகமும்-சீன நாடும் பண்பாட்டு உறவுகள், வணிக உறவுகள் ெகாண்டு  விளங்கியதை தொல்லியல் மற்றும் வரலாற்றுச்சான்றுகள் எடுத்துக்கூறுகின்றன.சீன இலக்கியம், தமிழ் கல்வெட்டுகள், சீன பீங்கான் மற்றும் சீன காசுகள் போன்ற  பொருட்கள் மூலமாக இத்தொடர்புகளை நாம் அறியலாம். இவ்விரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் பெளத்த சமயம், சமுதாயம், கடல் வணிகம் போன்ற  துறைகளில் மேலாங்கி இருந்தது. தமிழகத்தை பற்றி சீனர்கள் கி.மு. 2ம் நூற்றாண்டிலேயே அறிந்திருந்தனர். சீனாவில் இருந்து பட்டு இறக்குமதி செய்யப்பட்டது என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது. சீனத்துப்பட்டு வணிகர்கள் மத்திய தரைக்கடல் வழியே யவன நாடுகளுக்கு  சென்று விற்றனர். அவர்கள் சென்ற பெருவழி பட்டுப்பெருவழி எனப்பட்டது. இது, மத்திய ஆசியா, சுமத்ரா, மலேசியா, பர்மா, வங்கம், கலிங்கம் சாதவாகன நாடு, தமிழ்நாடு செங்கடல் வழியாக யவன நாட்டிற்குச் சென்று பட்டு வணிகத்தில்  ஈடுபட்டனர். இதனை பண்டைய நாளில் பட்டு (கடல்) வழி என அழைத்தனர். பட்டினப்பாலை 189 ‘‘குணகடல் துகிரும்’ என்று கூறுவது சீனப்பட்டினை ஆகும்.
மேலும், வூடி என்ற (Wudi B.C. 140-86) என்ற சீன அரசர் காலத்தில் ஹுவாங்கு பகுதியோடு வணிக உறவுகள் இருந்தது என சியன் ஹன்சு (Qian Han Shu)  என்ற நூல் தகவலை அளிக்கிறது. ஹுவாங்க் என்ற குறிப்பிடும் ஊர் காஞ்சிபுரம் ஆக  இருக்கலாம் என அறிஞர்களால் கருதப்படுகிறது.

இந்தியாவில் இருந்து பௌத்தமதம் சீன நாட்டுக்கு பரவியது. சமய ஒற்றுமை ஏற்பட்டது. காஞ்சிபுரத்தை சார்ந்த போதி தர்மர் பௌத்த மதத்தை சீனாவில் பரப்ப சென்றார். கி.பி. 7ம் நூற்றாண்டில் யுவான் சுவாங்  என்ற புத்தத்துறவி காஞ்சிபுரம் வந்தார். காஞ்சிபுரத்தில் மாமன்னர் அசோகரால் ஏற்படுத்தப்பட்ட பௌத்த ஸ்தூபம் ஒன்று இருந்தது. அது சுமார் 100 அடி உயரத்திற்கும் மேல் இருந்தது. காஞ்சியில் பல  பௌத்த பள்ளிகள் இருந்தன என்று யுவான் சுவாங் தனது பயண நூலில் குறிப்பிடுகிறார்.காஞ்சிபுரத்தில் வைகுண்ட பெருமாள் கோயில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 736-796) காலத்தில் கட்டப்பட்டு, பரமேஸ்வர விண்ணகரம்  என அழைக்கப்பட்டது. இக்கோயிலில் திருச்சுற்றுச்சுவர்களில் பல்லவ அரசர்களின் வரலாறு புடைப்புத் தொடர் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க காஞ்சிபுரத்தின் தொன்மை சிறப்பினை அறிய மத்திய அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை, காஞ்சி சந்திரசேகர பல்கலைகழகம்  போன்றவை பல்லவமேடு போன்ற பல இடங்களில் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டன.இவற்றில் காமாட்சியம்மன் கோயில் அருகே நடைபெற்ற அகழாய்வில் பெளத்த ஸ்தூபம் என்று கருதப்படும் வட்ட வடிவிலான கட்டிடப்பகுதி  வெளிப்படுத்தப்பட்டது. இக்கட்டிடப்பகுதி அருகே மண் அடுக்கில் ‘புதலதிச’ என்ற பெயர் பொறிப்பு உள்ள பானை ஓடு கிடைத்தது. அப்பெயர் பௌத்தத்துறவியின் பெயராக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. மேலும் கியோ தங்கசு என்ற நூல் சீன  வணிகர்களுக்காக பல்லவ நாட்டில் (காஞ்சிபுரம் அல்லது மாமல்லபுரத்தில்) கட்டப்பட்ட கோயிலை பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.

சோழ மன்னர்கள் காலத்தில் சீனாவுடனான வணிக உறவு மேலும் வலுவடைந்தது. தூதுக்குழுக்கள் அனுப்பப்பட்டன. ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் காலத்தை தொடர்ந்து முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் 72 பேர் அடங்கிய குழு  சீனவுக்கு பயணம் மேற்கொண்டனர். சீன நூல்கள் குலோத்துங்கச் சோழனை ‘திஹீயா கியாலோ’ (தேவன் குலோத்துங்கன்) என்று குறிப்பிடுகின்றன.தமிழ்நாட்டு வணிகர்கள் பலர் சீன நாட்டுக்கு சென்றனர். சீனாவின் தென்பகுதியில் குவன்சு (Quanzhou)  என்ற ஊரில் ேகாயில் கட்டப்பட்டது. இக்கோயில் சீன அரசர் செகசைகானின் (குப்லாகான்) அனுமதியோடு சம்பந்தப்பெருமாளான தவ  சக்கரவர்த்திகள் கி.பி.1282ம் ஆண்டு கட்டப்பட்டது. சீன அரசர் பெயரால் திருக்காணீச்சுரம் என்று அழைக்கப்பட்டதை தமிழ் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், தமிழகக் கோயிலின் பகுதிகள் சீனாவில் அகழாய்வில் பல இடங்களில்  கிடைத்துள்ளன. மேலும், கி.பி. 8ம் நூற்றாண்டில் சீன அரசன் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்ம வர்மனின் (கி.பி. 695-728) அனுமதி பெற்று நாகப்பட்டினத்திற்கு வரும் சீன துறவிகளுக்காக ஒரு புத்தவிகாரம் கட்டினான். அது சீன பகோடா (கோயில்) என்று  சென்ற நூற்றாண்டு வரை மக்களால் அழைக்கப்பட்டது.நாகப்பட்டினம் காயா ரோகணமுடையார் கோயிலில் அமுது படைத்து வழிபாடு செய்ய கடாரத்து அரசனால் தானம் அளிக்கப்பட்ட செய்தியில் 87 கழஞ்சு (சீனக்கனகம்) வழங்கப்பட்டதாக முதலாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது.  இங்கு சீனக்கனகம் என்ற பெயரில் பொன் சிறப்பித்து கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

 ராமநாதபுரத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் கடற்கரையில் பெரியப்பட்டினம் அமைந்துள்ளது. இவ்வூர் பராக்கரிமப்பட்டினம், பவுத்திர மாணிக்கம்பட்டினம் என்று அழைக்கப்பட்டதை கல்வெட்டுகளால் வரலாற்று செய்திகளால் அறிய முடிகிறது. மார்க்கோபோலோ, இபின் பதூதா போன்ற கடல் வழி பயணிகள் இவ்வூரை பட்டன்-படன் என தமது பயணக்குறிப்புகளில் குறிப்பிடுகின்றனர். இங்கு தஞ்சை தமிழ் பல்கலைகழகம் 1987ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டனர். அகழ்வாராய்ச்சியில்  கிடைத்த சீன நாட்டு மண்பாண்டங்களை ஆய்வு செய்த மறைந்த பேராசிரியர் நொபொருகராஷிமா இவை 13-14ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும் சீனாவில் இருந்து வந்தவை என்றும் தெரிவித்துள்ளார். டௌயி-சிலு (Daoyi-zhilve)  என்ற  நூலில் டாப்டன் என்ற தென்னிந்திய துறைமுகம் குறிப்பிடப்படுகிறது. சீன மொழியில் டா என்றால் பெரிய. ‘படன்’ என்றால் பட்டினம்- பெரியபட்டினம் என்ற இவ்வூர் குறிக்கப்படுகிறது. பெரிய துறைமுகப்பட்டினமாக இவ்வூர் விளங்கியிருக்க  வேண்டும். கி.பி. 1293ல் மார்க்கோபோலோ என்ற கடல்பயணியும் சீனாவில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வந்போது பெரியபட்டணத்திற்கு வந்து சென்றதையும் அறிய முடிகிறது.சீனநாட்டுடன் கொண்டிருந்த வணிக தொடர்புக்கு சான்றாக சீனகாசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன.  மதுரை (வைகை ஆற்றுப்படுகை), புதுச்சேரி, மதுரை, தரங்கம்பாடி, நெடுங்காடு, தேரழுந்தூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. தரங்கம்பாடி  பகுதியில் கிடைத்த காசுகள் ஜின் (கி.பி. 1224-1236) மற்றும் மிங் (கி.பி.1628-1644) அரச பரம்பரையை சேர்ந்ததாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 ஊர்களில் சீன காசு கொண்ட புதையல் கிடைத்துள்ளன.

மயிலாடுதுறை அருகில் உள்ள தேரழுந்தூரில் கிடைத்த காசு ஹீயசாங் (கி.பி. 1102-06) என்ற சீனப் பேரரசர் காலத்தால் வெளியிடப்பட்டதாகும்.பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் விக்கிரம் எனற ஊரில் 20 காசுகளும், மன்னார்குடி அருகே தல்லிக்கோட்டையில் 1822 காசுகளும், பட்டுக்கோட்டை வட்டத்தில் ஒலயக்குன்னம் என்ற ஊரில் 323 காசுகளும்  கிடைத்துள்ளன. தமிழகத்தில் கிடைத்த சுங் (கி.பி.960-1279) அரச பரம்பரையை சேர்ந்தவர்களின் காசுகள் அதிகளவில் கிடைத்துள்ளன. தரங்கம்பாடியை சுற்றியுள்ள ஊர்களில் கண்டெடுக்கப்பட்ட 3 காசுகளில் ஒரு காசு ஜின் அரச குலத்தை  சார்ந்தது. கி.பி. 1224-1236க்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பெற்றது. மற்ற இரண்டு காசுகள் மிங் அரச குலத்தை சார்ந்தது. கி.பி. 1628-1644க்கும் இடைபட்ட காலத்தில் வெளியிடப்பெற்றது. நெடுங்காட்டில் கிடைத்த நான்கு காசுகளில் இரண்டு  காசுகள் செ சாங் (1085-1100) அரசராலும், மற்ற இரண்டு காசுகள் ஹ்யூ சாங் (1100-1106) அரசராலும் வெளியிடப்பட்டது.தஞ்சை மாவட்டம் கடற்கரை பகுதியில் இருந்து வெண்கலமணி ஒன்றும் சீன செப்புகாசுகளும் கிடைத்துள்ளன. மணியில் சீன எழுத்துகள் காணப்படுகின்றன. சீன மொழியில் பீன் ஆங் என குறிக்கிறது. ஜப்பானிய மொழியில் இதனை ஹீயான்  என அழைக்கின்றனர். இரண்டுக்கும் சாந்தி-அமைதி-சமாதானம் என்பது பொருள் ஆகும். சீன நாட்டிற்கும் தமிழகத்துக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்ததற்கு சான்றாக இது விளங்குகிறது. சீன நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல்லவ மன்னர்களின் துறைமுகப்பட்டினமாக மாமல்லபுரத்தில் இந்திய-சீன நாட்டு நட்புறவு  சந்திப்பு நடப்பது நமக்கு பெருமை அளிப்பதாகும்.

பீங்கான்பானை ஓடுகள்
சீன நாட்டுடன் ெகாண்டிருந்த வணிகத்தொடர்புக்கு சான்றாக சீன பீங்கான் பானை ஓடுகள் ஆய்வுகளில் கிடைத்துள்ளன. தமிழகத்தில் அரிக்கமேடு, தரங்கம்பாடி, நாகப்பட்டினம், பெரிய பட்டினம், கங்கைகொண்ட சோழபுரம், பழையகாயல், தாராசுரம், பழையாறை போன்ற பல இடங்களில் கிடைத்துள்ளன. பச்சை வண்ணமுடைய செலடன் (Celadon)  வெள்ளை நிற பீங்கான் (Porcelain) ஆகிய சீன நாட்டு பானை ஓடுகள் கி.பி. 12-13ம்நூற்றாண்டை சேர்ந்ததாகவும், வணிக தொடர்புக்கு ஆதாரமாகவும் விளங்குகிறது.

திருவாரூரில் கண்டெடுக்கப்பட்ட சீன வெண்கலமணி
சீன மொழியில் இரண்டு சொற்களை கொண்ட ஒரு வெண்கலமணி, திருவாரூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சாந்தி, சாந்தி என்ற பொருளுடைய வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இம்மணி கி.பி. 11-12ம் நூற்றாண்டில் செய்யப்பட்டிருக்கலாம்.  இம்மணி சீன வணிகர் அல்லது புத்தத்துறவியினுடையதாக இருக்கலாம். இந்த மணியுடன் 3 சீன காசுகளும், சீனக்காசின் துண்டொன்றும் கிடைத்துள்ளது. இவற்றில் ஒரு காசு படத்துடன் வெளியிடப்பெற்றுள்ளது. அக்காசு ஹ்யூ சாங் (கி.பி. 1120-1106) என்ற சீன அரசரால் வௌியிடப்பட்டது.

தமிழர்களும் சீனர்களும்
சீனரும் தமிழரும் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் அதிகளவிலான தொடர்புகளைக் கொண்டுள்ளனர். சீனமும் தமிழும் சிங்கப்பூர் அரசின் ஏற்பு பெற்ற ஆட்சி மொழிகளாகும். சிங்கப்பூரில் தமிழர் சீன மொழியைப் படிப்பதும், சீனர் தமிழ்  மொழியைப் படிப்பதும் இன நல்லிணக்கத்திற்கு சான்றாகும். மலேசியாவில் மலாயர்களுக்கு அடுத்த பெரும் சமூகங்களாக சீனரும் தமிழரும் வாழ்கின்றனர், மலேசியாவில் சீனம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரசுப் பாடத்திட்டத்திலும்  சேர்க்கப்பட்டிருக்கின்றன.

காஞ்சிக்கு வந்த யுவான் சுவாங்
முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630-668) காலத்தில் காஞ்சிக்கு சீன பயணி யுவான் சுவாங் பயணம் மேற்கொண்டார். வைகுந்த பெருமாள் கோயிலில் காணப்படும் பல்லவர் வரலாற்றைக்கூறும் தொடர் சிற்பங்களில் தென்மேற்கு மூலையில்  காணப்படும் சிற்பத்தில் கையில் பிடியுடன் கூடிய சாமரம் போன்ற ஒன்றை தாங்கிய நிலையில் ஒருவர் நிற்கிறார். அவருடைய முகம் சீன நாட்டவர் முகத்தோற்றத்துடன் காட்சி அளிப்பதை காணலாம். யார் அவர் என அறிய போதிய  சான்றுகளில்லை. எனினும் சீன நாட்டு பயணியாக இருக்கலாம் எனக்கருத வாய்ப்புள்ளது.

சீன பிரதமர் ரசித்த பத்மினியின் நாட்டியம்
1956ம் ஆண்டு சென்னை வந்த சீன பிரதமர் சூஎன்லாய் அண்ணா மேம்பாலத்திற்கு கீழ் அன்றைக்கு இருந்த ஜெமினி படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். அதன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் தொழிலாளர்களுடன் சீனப் பிரதமரை வரவேற்றார். ஜெமினி  ஸ்டுடியோவில் சினிமா படப்பிடிப்பையும், நடிகை பத்மினி நாட்டிய, நடனத்தையும் கண்டுகளித்து சூஎன்லாய் வியந்தார்.

சிந்தியர் சீனருக்கும் இந்தியருக்கும் பிறக்கும் குழந்தைகள் சிந்தியர் எனப்படுவர்.
சிந்தியர்களில் பெரும்பான்மையினரது தாய்மொழிகள் சீனமும் தமிழுமாக உள்ளது. இது இரு சமூகத்தினரின் புரிந்துணர்வைக் காட்டும். சீனருக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்புகளையும் அவர்களின் மொழி, பண்பாட்டுவழி ஆய்வுகளை  மேற்கொள்வது சீனத் தமிழியல் எனப்படும். அதிகளவிலான சீன,தமிழ் மொழிகளுக்கிடையிலான மொழிபெயர்ப்புகள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நடைபெறுகின்றன. தமிழக அரசு திருக்குறளை சீன மொழியில் மொழி
பெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சீனாவின் தமிழ் வானொலி ஒலிபரப்பு
சீனா உலக நாடுகளுடன் தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள, பிற நாட்டு மொழிகளில் உள்ளூர் செய்திகளை வழங்குகிறது. இந்திய, இலங்கை மக்களுக்காக தமிழிலும், மற்ற சில இந்திய மொழிகளிலும் செய்திகளை ஒலிபரப்புகின்றனர்.  சீனாவின் தமிழ் வானொலி ஒலிபரப்பு நிலையம் ஒரு வருடத்திற்கு ஐந்து லட்சம் வாசகர் கடிதங்களை தமிழர்களிடம் இருந்து பெற்று, 60 சர்வதேச வானொலி ஒலிபரப்பு நிலையங்களை விட முன்னிலையில் உள்ளது. இதில் பணிபுரிந்த  சீனப்பெண், தமிழில் புத்தகம் எழுதியுள்ளார்.
1950களில் இங்கு ஆயிரக்கணக்கான சீனர்கள் வாழ்ந்தனர். ஈய வணிகம் உச்சக் கட்டத்தில் இருந்தது. சீனர்களும் தமிழர்களும் சகோதரர்களாக வாழ்ந்தனர். சீனப் பெருநாளின் போது சீனர்களின் வீட்டிற்கு தமிழர்கள் போவார்கள். தமிழர்களின்  வீட்டிற்கு சீனர்கள் வருவார்கள். தமிழர்களின் கோயில் திருவிழாக்களில் சீனர்கள் அலகு குத்தி காவடிகள் எடுத்தனர். கோயில்களில் அன்னதானம் செய்யும் செலவுகளை சீனர்கள் எற்றுக் கொண்டனர்.தீபாவளிக் காலங்களில் தமிழர்களின் வீட்டிற்கு செல்லும் சீனப் பெண்கள் தீபாவளிப் பலகாரங்கள் செய்வதற்கு உதவி செய்வார்கள். அதே போல சீனர்களின் வைபவங்களுக்குப் போகும் தமிழ்ப் பெண்கள் அவர்களுக்கு வீட்டு வேலைகள், மற்ற  உதவிகளையும் செய்வார்கள். குடும்ப உறவுகள் வலுப்பெற்றன.

பண்பாட்டுப் பரிமாற்றம்
பண்டைக் காலந்தொட்டே தமிழர்கள் கடல்கடந்து வாணிகம் செய்துள்ளனர். மலேசியாவின் தமிழ்க் கோயில்களில் சீனர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதும், தமிழர் பணி மேன்மைக்காக சீன மொழியைப் படிப்பதும் காணக்கூடிய ஒன்று.இலங்கையில் காலே என்னும் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அவை: தமிழ் மொழி, பாரசீக மொழி, சீன மொழி. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1409. இதிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே  தமிழகத்திற்கும் சீனாவிற்கும் இடையே தொடர்பு இருந்ததை அறியலாம்.

Tags : Chinese ,Tamil Nadu , Chinese, Tamil Nadu , 2nd century
× RELATED தமிழக ராணுவ வீரர் சீனா எல்லையில் மரணம்