×

6ம் கட்ட பணி ஜனவரியில் தொடங்கும் கீழடி பொருட்கள் மதுரையில் கண்காட்சியாக வைக்கப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை: தமிழ் ஆட்சி மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டம், ராமேசுவரம் செல்லும் சாலையில் மதுரைக்கு கிழக்கே 13 கி.மீ. தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் கீழடி கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊரில் உள்ள பள்ளிச்சந்தை திடலில் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்லியல் மேட்டில் இந்திய தொல்லியல் துறை 2014 முதல் 2017ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொண்டது. இந்த அகழாய்வுகளில் 7818  தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், செங்கல் கட்டுமானங்களும் வெளிக்கொணரப்பட்டன. இந்த கட்டுமானங்கள் நெசவு தொழிலுக்கான சாயத் தொழிற்சாலையின் கட்டுமான அமைப்பு என தெரிவிக்கப்பட்டது. கீழடியில் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள்  வெளிப்படுத்தப்பட்டன.இந்த சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வினை மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனை குழுவின் அனுமதியை பெற்றது. இந்த 4ம் கட்ட அகழாய்விற்கு தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி  ஒதுக்கீடு செய்தது. இந்த அகழாய்வில் 34 குழிகள் அமைக்கப்பட்டு 5,820 தொல்பொருட்களும், பழந்தமிழரின் கட்டுமான பகுதியும் கண்டெடுக்கப்பட்டன.

4ம் கட்ட அகழாய்வினை அடுத்து 2018-2019ம் ஆண்டு 5ம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த 5ம் கட்ட அகழாய்வில் பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இந்திய தொல்லியல் துறை 2ம் கட்ட  அகழாய்வில் வெளிப்படுத்திய கட்டுமானத்தின் தொடர்ச்சியை வெளிக்கொணர்ந்துள்ளது.இந்த கட்டுமானங்கள் செங்கல்லிலான திறந்த நிலையிலான வாய்க்கால், மூடிய நிலையிலுள்ள வடிகால், சுருள் வடிவிலான சுடுமண் குழாய் போன்ற வடிகால் அமைப்புகள் கண்டறியப்பட்டன. மேலும், 16 மீட்டர் நீளத்தில் ஒற்றை அடுக்குடன் கூடிய சுவர், இரண்டு உறைகிணறுகள், செங்கல் கொண்டு கட்டப்பட்ட தொட்டி போன்றவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சுடுமண் உருவங்கள், மணிகள், செப்புக்காசுகள், இரும்பு பொருட்கள், வட்டச்சில்லுகள், ஆட்டக்காய்கள், எலும்பு முனைகள், சுடுமண் காதணிகள், சங்கு வளையல்கள், தந்தத்திலான பொருட்கள் போன்ற ஏறத்தாழ 900 தொல்பொருட்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது அகழாய்வு பணியானது நிறைவுற்றுள்ளது. ஆனால் அண்மையில் பெய்த மழையின் காரணமாக ஆவணப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது நிழற்படம், அகழாய்வு குழிகளின் வரைபடம் தயாரித்தல் போன்ற ஆவணப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.அதே நேரத்தில் கீழடி அகழாய்வினை காணவரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அக்டோபர் 13ம் தேதி வரை (நாளை மறுதினம்) பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். பின்னர் ஓரிரு நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடையவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பார்வையிடுவதற்கு வசதியாக அகழாய்வில்  கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் அனைத்தும் மதுரையில் கண்காட்சியாக அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தேதி விரைவில் அறிவிக்கப்படும். மத்திய தொல்லியல் ஆலோசனை குழுவிடம் இருந்து 6ம் கட்ட அகழாய்விற்கு அனுமதி பெற்ற பின்னர் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அகழாய்வு பணி மீண்டும் தொடங்கும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Pandiyarajan ,Madurai ,announcement , January 6,display ,Madurai, Minister ,Pandiyarajan's,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...