நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம்: புதிய தமிழகம் கட்சி கொடியை பயன்படுத்த எதிர்ப்பு

நாங்குநேரி: மூலைக்கரைப்பட்டியில் பிரசார பணியில் ஈடுபட்டிருந்த வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுகவினரை புதிய தமிழகம் கட்சியினர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து 12 அமைச்சர்கள் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் திருச்சி மாவட்ட  அதிமுகவினர் மூலைக்கரைப்பட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். நேற்றும் மூலைக்கரைப்பட்டி பஜார் பகுதியில் வீதி, வீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த சிலர், எங்களின் அனுமதியின்றி புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியின் படத்தை போட்டு துண்டு பிரசுரம் அச்சடித்து விநியோகித்து எப்படி வாக்கு கேட்கலாம் என கேள்வி  எழுப்பினர். மேலும் அமைச்சரிடம் நேரடியாக வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், செய்வதறியாது திகைத்து நின்றார்.

எங்களது கோரிக்கையான தேவேந்திர குல வேளாளர் குல உட்பிரிவுகளை ஒன்றிணைத்து இதுவரை அரசாணை வெளியிடவில்லை. இந்நிலையில் நாங்கள் தேர்தலை புறக்கணித்து இருக்கும்போது எங்கள் பேரைச் சொல்லி வாக்கு கேட்கக்  கூடாது என்று கண்டித்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மூலைக்கரைப்பட்டி போலீசார், புதிய தமிழகம் கட்சியினரை சமாதானப்படுத்தினர். பின்னர் அமைச்சரும், அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.அமைச்சரை புதிய தமிழகம் கட்சியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம், மூலைக்கரைப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : constituency ,Nankuneri ,Vellamundi Natarajan ,Opposition ,Wellamandi Natarajan Protest in Blockade: New Tamil Nadu , Presentation ,Nankuneri constituenc, New Tamil Nadu, party flag
× RELATED நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி இடையே...