×

அடிப்படை பிரச்னைக்காக மக்கள் போராடும் நிலையில் ஆட்சியை காப்பாற்ற போராடும் அதிமுக: நெல்லையில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

நெல்லை: நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று 3வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.நேற்று காலை நெல்லை அருகேயுள்ள முன்னீர்பள்ளம், தருவை, செங்குளம் ஆகிய கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கிராம மக்கள், குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, பஸ் வசதி  உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என புகார் தெரிவித்தனர். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மக்கள் கஷ்டப்படுகின்றனர். இங்கு மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக  தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. குளத்தை தூர் வாரினோம் என்று கூறிக்கொண்டு அதில் அதிமுகவினர் கமிஷன் பார்க்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. அதற்கு நாங்கள் தான்  தடையாக இருக்கிறோம் என்று திமுக மீது அதிமுக பழி கூறி வருகிறது. இதனை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.

உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என அரசையும் தேர்தல் கமிஷனையும் நாங்கள்தான் வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் மட்டுமே மக்களுக்கு விடிவு காலம் ஏற்படும். மத்தியில் நமக்கு ஆதரவான ஆட்சி  இல்லை. தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக உள்ள திமுகவினர் அந்தந்த மாவட்டங்களில் எங்களால் முடிந்த வரை குளங்களை தூர்வாரி வருகிறோம். இந்த பகுதியில் அரசு அதிகாரிகள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்  யாரும் வந்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடிப்படை பிரச்னைகளுக்காக மக்கள் போராடுகையில், அதிமுகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தினமும் போராடி வருகின்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தலைமையை  மிரட்டி சாதித்து வருகின்றனர். தமிழக நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தாலும் கூட மத்திய அரசுக்கு அதிமுக அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. பொதுமக்களை பற்றி சிறிதளவு கூட கவலைப்படாத ஆட்சிதான்  தமிழகத்தில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து மாலையில் நாங்குநேரி, பரப்பாடியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:மக்களுக்கு இவர்கள் எந்த பணியும் செய்யவில்லை. இவர்கள் நடத்திய இரண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டையும் சேர்த்து 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.10 லட்சம் பேருக்கு  இல்லை, ஒரு லட்சம் பேருக்காவது வேலைவாய்ப்பு கொடுத்துள்ளாரா, ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளாரா. தைரியம், தெம்பு இருந்தால் முதல்வர் எடப்பாடி, அவர்களை வரிசையில் நிற்க வைத்து வேலைவாய்ப்பு  கொடுத்துள்ளேன் என சொல்லட்டும். அவருக்கு நான் பாராட்டு விழா நடத்துகிறேன். விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்த 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்த 5 லட்சம் பேர்  வேலை இழந்து தவிக்கின்றனர். திருப்பூரில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து தெருவில் அலைந்து திரிகின்றனர். எனவே இந்த ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையிலும் நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி அமைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : MK Stalin ,AIADMK ,State , underlying, problem, regime,MK Stalin,allegation
× RELATED சொல்லிட்டாங்க...