×

திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி கொள்ளை முக்கிய குற்றவாளி சுரேஷ் செங்கம் கோர்ட்டில் சரண்: காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம்

செங்கம்: திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த 2ம் தேதி அதிகாலை சுவரில் துளையிட்டு 13 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி  கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி திருவாரூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒரே பைக்கில், பெட்ரோல் டேங்கில் ஒரு அட்டை பெட்டியுடன் வேகமாக வந்த 2 பேரை தடுத்து நிறுத்தினர். ஆனால், அவர்கள் பைக்கை நிறுத்தாமல்  சென்றனர். இதையடுத்து, போலீசார் துரத்தி சென்றனர். இதைபார்த்த பைக்கில் பின்னால் இருந்த வாலிபர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். பைக்கை ஓட்டி வந்த நபர் பிடிபட்டார்.விசாரணையில், அவர் திருவாரூரை சேர்ந்த மணிகண்டன் என்பதும் பைக்கில் இருந்த அட்டைப்பெட்டியில் நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 4.8 கிலோ எடையுள்ள தங்க, பிளாட்டின நகைகள் இருந்ததும் தெரிந்தது. தப்பி ஓடியவர் சுரேஷ்  என்றும், கொள்ளையில் தலைவனாக செயல்பட்ட முருகனின் அக்கா கனகவல்லியின் மகன் என்றும் தெரிந்தது.

இதையடுத்து, போலீசார் கொள்ளை கும்பலின் தலைவன் முருகன் மற்றும் சுரேஷின் உறவினர்கள் 20 பேரை பிடித்தனர். அவர்களில் முருகனின் அக்கா கனகவல்லி மற்றும் உறவினர்கள் இருந்தனர். தொடர்ந்து போலீசார் மணிகண்டனையும்,  கனகவல்லியையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஜே.எம். முதலாவது கோர்ட்டில், நீதிபதி விக்னேஷ் பிரபு முன்னிலையில்  முக்கிய குற்றவாளியான சுரேஷ் (28) சரணடைந்தார். அவரை 5 நாட்கள் (14ம் தேதி வரை) திருச்சி சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதற்கிடையில் திருச்சி போலீசார் வந்து செங்கம் நீதிமன்றத்தில் குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்க கோரி சம்மன் அளித்தனர். இதையடுத்து, திருச்சி, செங்கத்தை சேர்ந்த போலீசார்சுரேஷை திருச்சிக்கு அழைத்து சென்றனர்.அவரை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முருகன் ஏற்கனவேகைதானது பற்றி கர்நாடக ஐஜி பேட்டி
தமிழகத்தை ேசர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியும், கர்நாடக மாநில ஐ.ஜி.யுமான ஹரிசேகரன், கொள்ளை கும்பல் தலைவன் முருகனை பற்றி  கூறியதாவது:  கர்நாடக மாநிலம் பெங்களூரு பானஸ்வாடியில் 2014  மே.17ல் தீபக் சிங்கால் (40) என்பவர்  வீட்டில்  கொள்ளையடித்ததாக 2015  அக்.20ல் முருகனை கைது செய்தோம்.  விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் பேபி திரையரங்கு சாலையை சேர்ந்த  முருகன் என்ற சிவகுமார் என்ற பாலமுருகன் (45) என தெரியவந்தது. அவரை 90  நாள் காவலில் எடுத்து விசாரித்து 9 கிலோ 400 கிராம் தங்கம், 700 கிராம் வெள்ளி, ₹36 லட்சம்  ரொக்கம்,  கேமராக்கள், ஒரு கார் உள்பட ₹3.16 கோடி  மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்  செய்துள்ளோம்.  இந்த வழக்கில் முருகனின் கூட்டாளி  சுரேஷை (30) 2016 பிப்.10ல் கைது செய்தோம். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து  வருகிறது. அடுத்த விசாரணை 2020 பிப்.29ம் தேதி வருகிறது. தேவைப்பட்டால் தமிழக போலீசாருக்கு முருகன் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க  தயார் என்றார்.

Tags : Suresh Chengam ,robbery ,jewelery shop ,Lalitha ,court ,Trichy Lalitha Jewelery ,Suresh Charan ,investigations ,Chengam , 13 crore robbery, Trichy ,Lalitha Jewelery,Suresh
× RELATED வீட்டை உடைத்து கொள்ளை