×

அரசு கல்லூரிகளில் எழுத்து தேர்வு இல்லாமல் உதவி பேராசிரியர்களை நியமிக்க கூடாது: தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு உத்தரவு

சென்னை: எழுத்துத் தேர்வு நடத்தாமல், அரசு  கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு, பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 300 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அக்டோபர் 4ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அறிவிப்பாணையில், அனுபவம், தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, சென்னையை சேர்ந்த சுப்பிரமணியன், காஞ்சிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன், ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல்  செய்த மனுவில், எழுத்து தேர்வு நடத்தாமல் நேர்முக தேர்வு அடிப்படையில் உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வது தொடர்பாக பிறபிக்கப்பட்ட அறிவிப்பாணை சட்டவிரோதமானது.

இதனால், பல்வேறு முறைகேடுகள் நடைபெறும். தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். அறிவிப்பாணையை  ரத்து செய்ய வேண்டும். எழுத்து தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்புமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.சங்கரன் ஆஜராகி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பாணை விதிமுறைகளுக்கு முரணானது என்று வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம்தான் தேர்வு நடத்தப்பட வேண்டும். உயர் நீதிமன்ற தோட்ட பணிகளுக்கு கூட எழுத்து தேர்வின் மூலம் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று கருத்து  தெரிவித்து இந்த வழக்கில் கல்வித்துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் அக்டோபர் 15ம் தேதிக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டார்.

Tags : Government colleges ,assistant professors ,High Court , exams ,government ,colleges, assistant p, High Court
× RELATED தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல்...