×

ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடக்கோரி வீடுகளில் தீபம் ஏற்றும் போராட்டம்; டெல்டாவில் நாளை நடக்கிறது

மன்னார்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் நாளை வீடுகளின் வாசல்களில் தீபம் ஏற்றும் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது. விழுப்புரம் முதல் ராமேஸ்வரம் வரை கடலோர மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏற்கனவே மத்திய அரசு ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது. இதில் 200க்கும் மேற்பட்ட இடங்களில்  டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான முதல்கட்ட பணிகளை இந்த நிறுவனங்கள் துவங்கியது. இதற்கு  விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

10 ஆயிரம் அடி ஆழத்தில் பூமியை துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. முதலில் தண்ணீர் வரும். பின்னர் நிலக்கரி, அதன்பிறகு ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும். பூமியில் இருந்து வரும் கழிவுகளால் விளை நிலங்கள்  பாதிக்கப்படும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடல்நீர் புகுந்து விடும். அடிக்கடி பூகம்பம் ஏற்பட வாய்ப்புண்டு. மொத்தத்தில் இந்த திட்டத்தால், டெல்டா பாலைவனமாகி விடும் என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள். எனவே இந்த  திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஏற்கனவே அனைத்து கட்சியினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். விவசாயிகள், பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தன்னெழுச்சியாக தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. மக்கள் விரும்பாத எந்த திட்டங்களையும் செயல்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு கூறியது.

ஆனால் ஹைட்ரோ கார்பன் எடுக்க நடைபெறும் பூர்வாங்க பணிகளை தமிழக அரசு தடுக்கவில்லை. மாறாக போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால்  தமிழக அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்தனர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனம் மேலும் 20 இடங்களில் எண்ணெய் எடுக்க மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு சில வாரங்களுக்கு முன் விண்ணப்பித்து  உள்ளது. நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட 15 இடங்கள், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் உள்பட 2 இடங்கள், காரைக்கால் மாவட்டத்தில் 3 இடங்களில் அனுமதி கேட்டு உள்ளது. மொத்தம் 640 கோடியில் இந்த  திட்டத்தை செயல்படுத்த ஓஎன்ஜிசி முடிவு செய்துள்ளது.
விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் மேலும் மேலும் எண்ணெய் எடுக்க மத்திய அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டு பணியில் இறங்கி உள்ளது விவசாயிகள்  மத்தியில் கொந்தளிப்பை அதிகப்படுத்தி உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் மீண்டும் போராட்ட களமாக மாறும் சூழல் உருவாகி உள்ளது. அதன்படி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முதல்கட்ட போராட்டத்தை ஹைட்ரோ கார்பன்  திட்ட எதிர்ப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது. அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் திருநாவுக்கரசு, இணை ஒருங்கிணைப்பாளர் சாக்கோட்டை இளங்கோவன், துணை செயலாளர் மயிலாடுதுறை விஜயராகவன் ஆகியோர் கூட்டாக  வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அண்மையில் எண்ணெய் குழாய்கள் திடீர் திடீரென வெடித்து தீப்பிடிப்பதும், கச்சா எண்ணெய் வயல்களில் பரவி  விளைநிலங்களை பாழாக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த 1956 முதல் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் மத்திய அரசு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்து வருகிறது. இதுவரை அமைக்கப்பட்டுள்ள 712 எண்ணெய் கிணறுகளில் 158 கிணறுகளுக்கு மட்டுமே தமிழக மாசு  கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது. மற்ற கிணறுகள் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா  நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தன்னெழுச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு முற்றிலும் கைவிட வேண்டும். போராடுபவர்கள் மீது வழக்குகள் போட்டு அச்சுறுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி  ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை (11ம்தேதி) மாலை 6 மணியளவில் பெண்கள், ஆண்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும்  தங்கள் வீடுகளின் வாசல்களில் தீபங்களை ஏற்றி வைத்து தமிழகத்தை சூழ்ந்துள்ள காரிருளை அகற்றிட முன் வர வேண்டும். இதன் மூலம் நியாயமான கோரிக்கை மத்திய, மாநில அரசுகளிடம் சென்றடையும். இவ்வாறு அறிக்கையில்  தெரிவித்துள்ளனர்.

Tags : Delta , Hydro-carbon Scheme Going on tomorrow in the Delta
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு