×

தமிழகத்திற்கு 125 ஆண்டுகளாக தண்ணீர் தரும் பெரியாறு அணை

*விவசாயிகள், பொதுமக்கள் இன்று கொண்டாட்டம்

கூடலூர் : தமிழகத்திற்கு இன்றுடன் 125வது ஆண்டாக பெரியாறு அணை தண்ணீர் தந்து கொண்டிருக்கிறது. கடந்த 18ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட பஞ்சத்தில் தென் தமிழகத்தில் விவசாயம் சீர்குலைந்தது. இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த மக்கள் பசி, பட்டினியால் புலம் பெயரத்தொடங்கினர். இதனால் புதிய அணை ஒன்றை கட்ட வேண்டும் என்று பலர் முயற்சித்தனர். இதற்காக தமிழகத்தில் 2,400 மீட்டர் உயரத்தில் சிவகிரி மலையில் தோன்றி பெருந்துறையாறு, சின்னாறு, சிறுதோணியாறு, கட்டப்பனையாறு, இடமலையாறு மற்றும் முல்லையாறை சேர்த்துக்கொண்டு அரபிக்கடலில் கலந்த தண்ணீரை தென்தமிழகம் நோக்கி திருப்பி கொண்டு வர நினைத்தனர்.

 இதற்காக 1798ல் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் தொடங்கி பலர் திட்டமிட்டும் நிதி பற்றாக்குறை, சரியான திட்டமிடலின்றி  இம்முயற்சி தோல்வியடைந்தது. இறுதியில் பிரிட்டிஷ் அரசு அனுமதியுடன் இன்ஜினியர் கர்னல் ஜான் பென்னிகுக் இதற்கான திட்டம் ஒன்றை தயார் செய்தார். அவரது திட்டப்படி முல்லை பெரியாறு குன்றுகளையும், மலைகளையும் கடந்து மேற்கு நோக்கி ஓடும்போது கடந்து செல்ல வேண்டிய குறுகிய, ஆழமான மலையிடுக்கில் ஒரு அணை கட்டி தண்ணீரை வைகை நதியுடன் இணைக்க முடிவு செய்தார்.

 ஆனால், அங்கேயும் பிரச்னை தலை தூக்கியது. அணை கட்டி முடிக்கப்பட்டால் தண்ணீர் தேங்கும் நிலப்பரப்பு, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குள் வருவதால், அந்த தண்ணீரை தமிழகத்துக்கு கொண்டு சேர்ப்பதற்கு திருவிதாங்கூரின் அனுமதி தேவைப்பட்டது. அதற்காக திருவிதாங்கூர் மகாராஜாவுடன் இதைபற்றி விவாதிப்பதற்கு சென்னை ராஜதானி முன்வந்தது. பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 1886, அக். 29ம் நாள் முல்லை பெரியாறு அணை ஒப்பந்தம் உருவானது. அணை நீரானது எல்லாக்காலங்களிலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரூ.43 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கர்னல் பென்னிகுக் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. பென்னிகுக்கின் தீவிர முயற்சியினால், 1895ல் முல்லைப்பெரியாறு அணை கட்டிமுடிக்கப்பட்டது. அதே ஆண்டு (இந்திய நேரப்படி) அக். 10ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மாகாண கவர்னர் வென்லாக் தேக்கடிக்கு வந்து, பெரியாறு அணை தண்ணீரைத் தமிழகப் பகுதிக்கு திறந்து வைத்தார். அன்றிலிருந்து இன்று வரை தலைமுறைகள் கடந்தும் 125 ஆண்டுகளாக தண்ணீர் கொடுத்து தென்தமிழகத்தை காத்து வருகிறது பெரியாறு அணை.

முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட இந்நாளை தென் மாவட்டங்களில் பொதுமக்களும், விவசாயிகளும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட 125வது ஆண்டை கொண்டாடும் விதமாக, இன்று மாலை பெரியாறு அணை மீட்புக்குழுவினர், விவசாய சங்கங்கள், பொதுமக்கள் முல்லைப் பெரியாற்றங்கரை தலைமதகில் கேக் வெட்டி, பொங்கல்வைத்து பொதுமக்களுக்கு வழங்குகின்றனர். இது தென் தமிழகத்தைக் காக்கும் பெரியாறுக்கு விவசாயிகள் செய்யும் நன்றிக்கடனாகும்.

ஒப்பந்தம் சொல்வது என்ன?

ஆண்டுதோறும் தன் நாட்டு மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் வெள்ளப்பெருக்கை ஓரளவு குறைக்கலாம் என்பதால், முல்லைப் பெரியாறு அணை கட்ட திருவிதாங்கூர் மகாராஜா மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். ஆனால் அணை கட்டும் செலவு முழுவதையும் சென்னை ராஜதானிதான் ஏற்க வேண்டும் என்றும், ஏரியின் தண்ணீரை தவிர நிலத்தின் மீது எந்த ஒரு உரிமையையும் கொண்டாடக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தார். அத்துடன் அணைக்கட்டின் பராமரிப்பு, பழுது பார்த்தல் பணிகளை திருவிதாங்கூரின்மீது சுமத்தக்கூடாது என சென்னை ராஜதானிக்கு மூன்று நிபந்தனைகளை விதித்தார்.

ஒப்பந்தத்தின்படி 8,000 ஏக்கர் பரப்பளவிலுள்ள தண்ணீரை தமிழ்நாட்டிற்கு குத்தகைக்கு கொடுக்கவும், தனியே 100 ஏக்கர் இடம் அதற்குண்டான பணிகளுக்குமாய் கொடுப்பதற்கு ஒப்பு கொள்ளப்பட்டது. இதற்கு குத்தகை தொகையாக ஏக்கருக்கு ஐந்து ரூபாய் தருவதாக சென்னை ராஜதானியும் ஒப்புக்கொண்டது. தேங்கியுள்ள நீர்பரப்பின் அடித்தளத்திலிருந்து 155 அடி உயர அணையை கட்டுவதற்கும், தண்ணீரை ஒரு குகைப்பாதை வழியாக தமிழகத்திற்கு கொண்டு செல்வதற்கும் ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டது.

 மேலும் அணையின் மராமத்துப் பணிகள் செய்வதற்கான பொருட்களை எடுத்துச்செல்ல சென்னை மாகாணத்திற்கு முழுமையான உரிமை வழங்குவதுடன், அணையினுள் அடங்கும் மரம் மற்றும் மரக்கட்டைகளை, அணையின் நலம் கருதி செயல்படுத்தும் திட்டங்களுக்கு சென்னை மாகாண அரசு எவ்வித கட்டணங்களும் கட்ட வேண்டியதில்லை. போக்குவரத்தின் முழு உரிமையும், அணையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உரிமை, அதிகாரம், சுதந்திரம் சென்னை மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Periyar Dam ,Tamil Nadu ,Periyaru Dam , Periyaru Dam,Water ,tamilnadu ,Farmers, happy
× RELATED கடும் வெயிலின் காரணமாக பிளவக்கல் அணை நீர்மட்டம் சரிவு