×

தேர்தலில் செலவு செய்து கடனாளியான நிர்வாகிகள் குக்கர் கட்சியில் இருந்து விலகுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘எல்லாம் தெரிந்தவர் போன்று காட்டிக் கொண்டவர்…படுகுழியில் விழுந்த கதையாக மாறிப்போன ஒரு அதிகாரியின் லீலைகளை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரியின்  பவர்புல் பெண்மணியின் சிறப்பு செயலர் சுந்தரமானவர், ஒரு காலத்தில் அதிகாரிகள் மத்தியில் மிகுந்த செல்வாக்கோடு வலம் வந்தார். செய்தி மற்றும்  விளம்பரத்துறையை தன் வசம் வைத்திருந்தார். கொரோனா நேரத்தில் பல கொரோனா  விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டார். ஆனால் தன் கீழ் இருந்த துறைகளை  சரியாக கையாளவில்லை என முதல்வர் சாமியின் அதிருப்தி அதிகாரிகள் பட்டியலில்  இடம்பிடித்தார். கவர்னராக மீண்டும் ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டார்.  அதன்பின்னரும்  அவரும் மாற்றப்படவில்லை. ஓய்வு நேரங்களில் முகநூல் பக்கத்தில் சிவாஜி,  எம்ஜிஆர் பாடல்களை பாடி அசத்துவார்.  துறை சார்ந்த வேலைகளை விட  பாட்டுபாடுவதில் தன்னை ஒரு கைதேர்ந்த பாடகராக காட்டிக்கொள்வார். சின்ராசு  பாட ஆரம்பிச்சுட்டார் என்கிற ரேஞ்சுக்கு அவரை பற்றி சக அதிகாரிகள்  கலகலப்பூட்டினர். இதற்கிடையே காலாப்பட்டு தொகுதியில் அவர் வசித்து வந்தார்.  அப்பகுதி வேட்பாளர் ஓட்டு கேட்டு அவரது இல்லத்துக்கு சென்றுள்ளார்.  அவருக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தாராம். இதனை ஒருவர்  படமாக எடுத்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் கொடுத்துவிட்டாராம். இதனால்  உடனே அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பறந்து வந்ததாம். ஆனால் அதற்கு  முன்னதாகவே விடுமுறை போட்டுவிட்டு எஸ்கேப் ஆனார். ஆனால் விடாமல் துரத்திய  தேர்தல் ஆணையம், என்ன ஆச்சு என தலைமை செயலருக்கு கொக்கி போட்டிருக்கிறது.  வேறு வழியின்றி அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாராம்.  இதற்கு ஒருநாள் முன்னதாக அவர், சூழ்நிலையை சூசகமாக விளக்கி ஒரு பாட்டு  பாடினாராம். ஒன்னுமே புரியலை உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது  என தன் மீதான நடவடிக்கைக்கு ஏற்ப பாடல் வரிகள் கொண்ட பாடலை தேர்வு செய்து  பாடியுள்ளார். இந்த பாடல் அதிகாரிகள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. இதை தான் எவ்வளவு விவரமாக இருந்தாலும் படுகுழியில் விழுந்த கதையாக சொல்லுவாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தொழில் நிறைந்த மாவட்டத்தில் உள்ள நாலு தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு என்ற பேச்சு சுனாமி போல சுற்றி வருதாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம்தேதி நடந்தது. தொழில்துறை மாவட்டமான கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளில் திராவிட கட்சிகள் நேரிடையாகவும், அரவக்குறிச்சி தொகுதியில் திராவிட கட்சியும் தேசிய கட்சியும் நேரிடையாகவும் போட்டியிட்டது. தமிழகத்திலேயே தொழில்துறை மாவட்டத்தில்தான் 86.15 சதவீதம் என வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ம்தேதி நடைபெறவுள்ள நிலையில் தொழில் துறை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் எந்த கட்சி வெற்றி பெறுவார்கள்… எந்த கட்சி ஆட்சி அமைப்பார்கள்… என சூதாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளதாம். தொழில்துறை மாவட்டத்தை பொறுத்தவரை வழக்கமாக ஐபிஎல், உலக கோப்பை கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடைபெறும் சமயத்தில்தான் இதுபோன்ற சூதாட்டம் இருந்து வந்துள்ளது. ஆனால் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து இந்த சூதாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளதாம். ₹1000ல் இருந்து ஆரம்பிக்கும் சூதாட்டம் கடைசியில் ₹1 கோடி வரை போய் நிற்கிறதாம்.  இந்த சூதாட்டத்தில் பெரும்பாலும் தொழிலதிபர்கள்தான் உள்ளார்கள் என அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக பேசிக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ரிப்பேரான குக்கரில் இருந்து வலுவான கட்சிக்கு இடம் மாற தயாராக இருக்கிறார்களாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குக்கர்  கட்சி தலைமையிலான கூட்டணியில முரசு இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திச்சது.   எப்ப, முரசு தனியா நின்னாலும், பூத் செலவுக்கு கூட காசு வாங்காம முரசு  தொண்டருங்க வேலை செய்வாங்களாம். ஆனால், இந்த முறை, குக்கரு கூட்டணி என்பதால  பணம் அதிக அளவில் கிடைக்கும்னு, முரசு தொண்டருங்க காத்திருந்தாங்களாம். இதுல  கிரிவல மாவட்டத்தில வாசி தொகுதியில போட்டியிட்ட குக்கர் வேட்பாளரு, அவர்  சக்தியை மீறி 20 எல் வரைக்கும் செலவு செஞ்சாராம். சிலர் கடன் வாங்கி செலவு செய்தாங்களாம்… காரணம், தலைமை பணம் தரும்னு நம்பி  செலவு செஞ்சவருக்கு ஆர்.கே.நகர்ல 20 ரூவா நோட்டு கொடுத்து ஏமாத்தின  கதையாகிடுச்சாம். தலைமை கொடுக்கும்னு காத்திருந்து, காத்திருந்து கையில  இருந்த பணத்த எல்லாம் செலவு செஞ்சிட்டதால, பூத் ெசலவுக்கு கூட பணம் கொடுக்க  முடியலையாம். இதனால, வாசி தொகுதி முழுசும், தெள்ளார் கிழக்கு  ஒன்றியத்தை தவிர மற்ற ஏரியா பூத்துல குக்கர் ஏஜென்ட்களே இல்லையாம். இதுல,  பூத் செலவுக்கு காசு வாங்காமலேயே வேலை செய்யுற முரசு தொண்டருங்களும்,  குக்கர்ல இருந்து காசு வரும்னு ஆசையா இருந்து ஏமாந்துட்டாங்களாம். இதனால,  செலவுக்கு பணம் தராமலேயே வேலை செஞ்ச எங்க தொண்டருங்களையும், காசு வரும்னு  ஆசைய காட்டி கெடுத்துட்டாங்களேன்னு முரசு நிர்வாகிங்க புலம்பறாங்களாம்.  இவங்க புலம்பல் இப்படி இருக்க, வாசி தொகுதியில மட்டுமில்ல தமிழகம்  முழுவதும் குக்கர் வேட்பாளருங்களும், வைட்டமின் கொடுக்காமலேயே  ஏமாத்திட்டாங்களேன்னு புலம்புறதோடு இனிமே இங்கே இருந்து எந்தபலனும்  இல்லைனு இடம்மாறுவதற்கும் தயாராகி வர்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post தேர்தலில் செலவு செய்து கடனாளியான நிர்வாகிகள் குக்கர் கட்சியில் இருந்து விலகுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Kukar ,Uncle ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...