×
Saravana Stores

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: ஜெயகோபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று ஐகோர்ட்டில் விசாரணை

சென்னை: சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஜெயகோபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணை வருகிறது. சென்னை குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ (23). துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  இவர், செப்டம்பர் 12ம் தேதி மதியம் 3 மணி  அளவில் வேலை முடித்து ஸ்கூட்டியில் வீட்டிற்கு புறப்பட்டார்.  குரோம்பேட்டை - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.  பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகரான காஞ்சி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர்  மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மகன் திருமண பேனர் பல கிமீ தூரத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று வரிசையாக வைக்கப்பட்டிருந்தது.

ரேடியல் சாலையில் ஸ்கூட்டரில் சுபஸ்ரீ வந்தபோது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீரென சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலை தடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தார். அப்போது  கோவிலம்பாக்கம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது மோதியது. லாரியின் முன்பக்கம் சிக்கிய அவரது ஸ்கூட்டர் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சுபஸ்ரீ இறந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், சட்டவிரோத பேனர்கள் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன்,  சேஷசாயி ஆகியோர் சட்டவிரோத பேனர்களை வைத்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது ஏன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால்  மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் ஜெயகோபால் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனும் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். இரண்டு பேரின் ஜாமீன் மனு, சென்னை ஐகோர்ட்  நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.


Tags : Banerjee Subhashree ,Jayakopal ,Jayagopal , Subasree, Jayagopal, bail petition, iCord, Inquiry
× RELATED தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி மாணவன் பலி