×

பாதாள சாக்கடை கட்டி முடித்தும் கிடப்பில் சாலை பணிகள்: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர்: மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகரில் பாதாள சாக்கடை கட்டி முடித்தும் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகரில் பாதாள சாக்கடை வசதி இல்லை. இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு 55 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி இப்பகுதியில் சாலையின் நடுவில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான பணி முடிவடைந்ததால் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாதவரம் மண்டலம் 26வது வார்டுக்கு உட்பட்ட பொன்னியம்மன்மேடு, பிரகாஷ் நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடை குழாயில் பழுது ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது.

இதையடுத்து இந்த சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை குழாய்கள் சரி செய்யப்பட்டன. ஆனால் பணி முடிவடைந்து 8 மாதங்கள் ஆகியும் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் மீண்டும் சாலைகள் போடாமல் அப்படியே கிடப்பில் விட்டுவிட்டனர். இதனால் பழுதடைந்த  இந்த சாலை வழியாக வாகனங்கள் சென்றால்  பழுதாகி நின்று விடுகிறது.இதுசம்பந்தமாக வார்டு உதவி பொறியாளர் மைதிலி என்பவரிடம்  பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சாலை போட நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து போராட்டம் செய்ய இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திட்டமிட்டனர்.
இதனை அறிந்துகொண்ட அதிகாரிகள் அவசர அவசரமாக கழிவு  கருங்கல் ஜல்லிகளை பழுதடைந்து இருந்த  பிரகாஷ் நகர் பிரதான சாலையில் போட்டனர். ஆனாலும் சாலையில் உள்ள மேடு பள்ளங்கள் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளதால்  குடிநீர் லாரி மற்றும் ஆம்புலன்ஸ் போன்றவைகள் சமன் இல்லாத சாலையில் செல்லும்போது சிக்கி நின்று  விடுவதோடு இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்கள் கழிவு கருங்கல் ஜல்லி துகள்களால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே உடனடியாக பிரகாஷ் நகர் பிரதான சாலையில் பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் தரமான சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் போடப்பட்ட  சாலைகள் பல இடங்களில் தரமாக இல்லை. இதனால் இவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது சாலைகள் உடைந்து பழுதாகி நின்று விடுகிறது. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக மக்களுக்காக கொண்டு வரப்படும் திட்டங்கள்  பயன்படாமல் போவதோடு மக்கள் வரிப்பணம் வீணாகிறது. எனவே இந்த பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க  உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : Road ,Motorists , sewer , finished, Road works,Motorists ,suffer
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...