×

ஆந்திராவில் சண்டை போடுவதற்காகவே நடந்த கோயில் விழாவில் 50 பேர் காயம்

திருமலை: கர்னூல் அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட மோதலில் 50 பேரின்  மண்டை உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் தேவருகட்டா குன்றின் மீது மாலா மல்லேஸ்வரா சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் விஜயதசமியையொட்டி சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். திருக்கல்யாணம் முடிந்த பின் சுவாமி ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தின் போது உற்சவ மூர்த்திகளை தங்கள் ஊருக்கு கொண்டு செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு கையில் கம்புகளை ஏந்தி சம்பிரதாய முறைப்படி ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது வழக்கம்.ஆரம்ப காலத்தில் சம்பிரதாய முறைப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி காலப்போக்கில் சொந்த பகையை தீர்த்து கொள்வதற்கான வாய்ப்பளிக்கும் திருவிழாவாக மாறியது. இதனால் கடந்த காலங்களில் தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக ஒருவரை ஒருவர்   கடுமையாக தாக்கி கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

 எனவே, திருவிழாவில் கலந்துகொள்ளும் கிராம மக்கள் மது அருந்தியும், பலமான கம்புகளுடன் கலந்து கொள்ளக்கூடாது என போலீசார் அறிவித்திருந்தனர். மேலும் 1000 போலீசார் பாதுகாப்புடன் சிசிடிவி கேமரா மற்றும் டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வந்தனர்.வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரை பங்கேற்றனர். இதில், சொந்தப்பகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதில் 50 பேரின் மண்டை உடைந்தது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆதோனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவிழா என்ற பெயரில் நடைபெறும் இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் திருவிழா முடிந்த பிறகு அதிகாரிகள் இதுபோன்று கூறுவதும், இதுபோன்று ஆண்டுதோறும் வழக்கம்போல் விழா நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.


Tags : temple festival ,Andhra Pradesh ,Andhra Pradesh 50th Temple Temple , 50 injured , temple, festival ,Andhra Pradesh
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி